மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், திருஇந்தளூரில் இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பரிமள ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வதும், காவிரியின் வடகரையில் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க கோயில்களுள் ஐந்தாவதாகவும் போற்றப்படுகிறது.
மேலும், சந்திரன் சாப விமோசனம் பெற்ற தலமாகவும், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயிலாகவும் விளங்குகிறது. இக்கோயிலில் பெருமாளின் திருமேனியானது 12 அடி நீளமும், 6 அடி அகலமும் கொண்டதாக, பச்சைக் கல்லால் வடிக்கப்பட்டு உள்ளது. பெருமாளின் சிலையில் பட்டு பீதாம்பரத்தின் மடிப்புகள், கை விரல் நகங்கள் என அனைத்தும் நுணுக்கமாக வடிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய பல்வேறு பெருமைகள் வாய்ந்த இக்கோயிலில், கடைசியாக 2009ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிகழாண்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு, கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோயிலில் சிறப்பு ஹோமங்கள் செய்து, கோயில் நிர்வாகத்தினர் முன்னிலையில் பாலாலயம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கோயிலின் ராஜ கோபுரம், பெருமாள், தாயார், ஆண்டாள், ராமர், ஆஞ்சநேயர் சன்னதிகள், கருட மண்டபம், ஏகாதசி மண்டபம், பங்குனி உற்சவ மண்டபம், திருத்தேர் மண்டபம், நான்கு கால் மண்டபம் உள்ளிட்ட அனைத்து விமானங்களும் புதுப்பிக்கப்பட்டு, இன்று (ஞாயிற்றுக்கிழ்மை) கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இதற்காக கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி யாகசாலை பூஜை, விஷ்வக்சேனர் திருமஞ்சனம், ஆராதனம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் தொடங்கி, 18ஆம் தேதி யாகசாலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து, முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. அந்த வகையில், கும்பாபிஷேக தினமான இன்று காலை 7ஆம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று, பூரணஹுதி செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை பட்டாச்சாரியார்கள் தலையில் சுமந்து, மேள தாள வாத்தியங்கள் முழங்க கோயிலைச் சுற்றி வலம் வந்து, விமான கும்பத்தை அடைந்து வேத விற்பனர்கள் வேதங்கள் ஓத, கோபுர கலசங்கள் மீது 10 மணிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மீனா, இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் ராமு உள்ளிட்ட அதிகாரிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பக்தர்கள் என ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு “கோவிந்தா.. கோவிந்தா..” என்று முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், ட்ரோன் மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம்..மாறாத அன்பு வச்ச மகராசி.. தீர்க்க சுமங்கலி வரம் தருவாள் மீனாட்சி..! - Meenakshi Thirukalyanam