ETV Bharat / state

மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை வீதியில் பறை இசைக்கு மறுப்பா? -குமுறும் இசை கலைஞர்கள்! - Parai Isai Denied Issue In Madurai

Denied To Parai Isai In Madurai Chitrai Road: உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வெளிப்புற சுற்றுப் பகுதியான நான்கு சித்திரை வீதிகளிலும் பறை இசைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக பட்டியல் சமூக மக்களும், பறை இசைக் கலைஞர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 10:24 PM IST

மதுரை: மதுரையின் மாபெரும் அடையாளமாகவும், உலகப் புகழ் பெற்ற ஆன்மிகத் திருத்தலமாகவும், மதுரையின் நடுநாயகமாகத் திகழும் மீனாட்சி அம்மன் கோயிலின் உள்ளேயும் மற்றும் கோயிலைச் சுற்றியும் பல்வேறு சிறிய கோயில்கள் உள்ளன. இந்த சிறிய கோயில்கள் அனைத்தும் பல்வேறு சமூக மக்களுக்கு சொந்தமாகவும், பாரம்பரிய வழிபாட்டிடமாகவும் திகழ்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் (Video Credits - ETV Bharat Tamilnadu)

கோயிலைச் சுற்றியுள்ள பல்வேறு வீதிகள் தமிழ் மாதங்களின் பெயர்களை சுமந்து, வியப்பான வரலாற்றைக் கொண்டு திகழ்கின்றன. நான்கு திசைகளைக் கொண்ட வெளி வீதிகள், அதற்கு சற்று உள்ளே மாசி வீதிகள், கோயிலின் வெளிப்புற சுற்றுப் பகுதியான சித்திரை வீதிகள் என இந்த வீதிகள் அனைத்தும் மீனாட்சி அம்மன் கோயிலின் பாரம்பரிய உற்சவங்களோடு தொடர்புடையவையாகும்.

அதிலும் குறிப்பாக நான்கு சித்திரை வீதிகளும், மீனாட்சி அம்மன் கோயிலின் அனைத்து திருவிழாக்களோடு தொடர்புடையவை. அதுமட்டும் இன்றி மதுரை மாநகர் மற்றும் மாவட்டப் பகுதிகளில் நடைபெறும் கோயில் திருவிழாக்களின்போது வைகை ஆற்றில் கரகம் எடுத்து சித்திரை வீதிகளை வலம் வந்து, அவரவர் கோயிலுக்குச் செல்லும் நடைமுறை இன்றைக்கும்கூட வழக்கத்தில் உள்ளது.

இந்நிலையில், கிழக்குக் கோபுரம் அருகே அமைந்துள்ள மதுரை வீரன் கோயிலில் பறை இசைக்க அனுமதி மறுப்பதாகவும், சித்திரை வீதிகளில் பறை இசைக் கலைஞர்கள் பறை இசைத்துச் செல்ல கடந்த சில ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்படுவதாகவும் மதுரையிலுள்ள பட்டியல் சமூக மக்கள் மற்றும் பறை இசைக் கலைஞர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து, மேலவாசல் பகுதியைச் சேர்ந்த பறை இசைக் கலைஞர் ராஜசேகரன் கூறுகையில், "மதுரை மாநகர் மட்டுமன்றி மாவட்டம் முழுவதும் பரவி வாழ்கின்ற பட்டியல் சமூக மக்கள் தங்களது குல தெய்வமாக மதுரை வீரனை வழிபட்டு வருகின்றனர். கிழக்குக் கோபுரம் அருகேயுள்ள மதுரை வீரன் கோயில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

நாயக்க மன்னர்கள் காலத்திலிருந்து இந்தக் கோயிலில் பட்டியல் சமூக மக்களால் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அவரவர் பகுதிகளில் உள்ள கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறும்போது, வைகை ஆற்றின் தீர்த்தக்கிணற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வந்து மதுரை வீரன் கோயிலின் முன்பாக பறையிசைத்து வழிபாடு செய்வது வழக்கமான நடைமுறையாகும்.

இந்த நடைமுறை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று சித்திரை வீதிகளில் பறை இசைத்துச் செல்வதும் வழக்கமான நடைமுறைதான். அதனையும் தடை செய்துள்ளார்கள். பிற சமூகத்து மக்களின் கோயில் திருவிழாக்களின்போது சித்திரை வீதிகளில் அனுமதிக்கிறார்கள். ஆனால், மேலவாசல் பகுதி ஆதிகாளியம்மன், மகாகாளியம்மன், பொன் முனியாண்டி, சந்தன மாரியம்மன் கோயில் திருவிழாக்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கிறார்கள். மாற்றுப்பாதையில் மட்டுமே பறை இசைக்க அனுமதிக்கிறார்கள்" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக தமிழ்ப்புலிகள் கட்சியின் தென் மண்டல செயலாளர் சிதம்பரம் கூறுகையில், "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை வீதிகளை பட்டியல் சமூக மக்கள் தங்கள் பாரம்பரியத்திற்காகப் பயன்படுத்துவதிலிருந்து பாகுபாடு காட்டப்படுகிறது.

இதுகுறித்து கடந்த 2019ஆம் ஆண்டே மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு அளித்தோம். அந்த மனு மீதான நடவடிக்கை கேள்விக்குரியதாகவே தான் உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள மொட்டைக் கோபுர முனியாண்டி, மதுரை வீரன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட கோயில்களில் வழிபட்டு தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதும், வேண்டுதல்களை நிறைவேற்றி திருமணங்களை நடத்துவதும் மதுரையில் உள்ள தொன்றுதொட்ட வழக்கங்களுள் ஒன்று.

இந்நிலையில், மதுரைவீரன் கோயில் முன்பாக பறை வாசிப்பதற்கு காவல்துறை தடை விதிக்கிறது. இதனை மீறி வாசிக்கச் செல்லும் பறை இசைக் கலைஞர்களை காவலர்கள் இழிவாகப் பேசுகிறார்கள் எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.

மதுரை வீரன் கோயில் முன்பாக திருமணம் நடைபெற்று முடிந்தபிறகு அதன் மணமக்களை பறை இசை வாசித்தவாறு நான்கு சித்திரை வீதிகளில் ஊர்வலமாய் அழைத்துச் செல்வது எப்போதும் வழக்கம். இந்நிலையில் தற்போது சித்திரை வீதிகளுக்கு முன்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பிலேயே அவர்கள் நிறுத்தி வைக்கப்படுகிறார்கள்.

ஆனால் பங்குனி உத்திரம், தைப்பூசம் மற்றும் ஜெய்ஹிந்துபுரம் வீரகாளியம்மன் கோயில் திருவிழா, நேதாஜி சாலையில் உள்ள தண்டுமாரியம்மன் கோயில் திருவிழாக்களின் போது சக்தி கரகம், பால்காவடி, வேல் குத்தி வருகின்ற பக்தர்களை அனுமதிக்கிறார்கள். ஆனால் பட்டியல் சமூக மக்களின் கோயில் திருவிழாக்களுக்கு மட்டும் தடை ஏற்படுத்தப்படுகிறது" என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, "மீனாட்சி அம்மன் கோயிலின் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறையால் கோயிலைச் சுற்றி பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மீனாட்சி கோயில் சார்ந்த திருவிழாக்களுக்கு மட்டுமே சித்திரை வீதிகளில் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. பிற எந்த கோயில் திருவிழாக்களுக்கும் இங்கு அனுமதி வழங்கப்படுவதில்லை" என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: "மன்னிப்பு கேட்கனும் இல்லைன்னா ரூ.1 கோடி தரனும்" - பாமகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய திமுக எம்.எல்.ஏக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.