கோவை: 2024 - 2025ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்.19) சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கோவை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.
கலைஞர் நூலகம், ரூபாய் 1,100 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, பணி புரியும் மகளிருக்காகத் தோழி விடுதிகள், குறுந்தொழில் முனைவோர்கள் உடனடியாக தொழில் துவங்க 1.2 ஏக்கர் பரப்பளவில் 4 அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி, ஆயுத தொழில் வளாகம், ரயில்வே தேர்வுகளுக்குத் தயாராக ஆறு மாத உறைவிட பயிற்சி மையம் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இது குறித்து குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மணிகண்டன் கூறுகையில், "தமிழகத்தில் உள்ள பல்வேறு நதிகளின் புனரமைப்பிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது அதே சமயம் நொய்யல் நதி புனரமைப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டாலும், நொய்யல் நதியில் கலக்கப்படும் கழிவுநீரால் நதி மாசு அடைகிறது.
அதனால், கழிவுநீர் ஆற்றில் கலக்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். அதேபோல் காலநிலை மாற்றத்தால் நீரோட்டத்தில் திசை மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் செய்த பின்னர் அடுத்த கட்ட பணியைத் துவக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இது குறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா, பெரிய நூலகம், குறிச்சி தொழில் பேட்டையில் புதிய தொழில் கட்டிடங்கள் என பல்வேறு அறிவிப்புகள் இருக்கிறது.
ஆனால், தொழில் துறையினரின் மின் கட்டண பிரச்சனைக்கான தீர்வு இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. 430 சதவீதம் மின்கட்டண உயர்வு காரணமாக நெருக்கடியில் இருக்கிறோம். அதற்கான மானியம் இந்த பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், அது தொடர்பான ஒதுக்கீடு எதுவும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.
தொழில் வளர்ச்சி அதிகம் இருக்கும் கோவையில் அதற்கேற்ற உட் கட்டமைப்புகள் இல்லை. அதேபோல் விமான நிலையம் விரிவாக்கம் குறித்த அறிவிப்புகளும் இல்லை" என வருத்தம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்கள்: காவிரி முதல் வைகை வரை பட்ஜெட்டில் அறிவிப்புகள்!