தேனி: கம்பம் அருகே உள்ள சுருளி அருவி, தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் புண்ணிய தலங்களில் ஒன்றாகவும் உள்ளது. சுருளி அருவியில் குளிக்க மக்கள் வருகை தரும் நிலையில், தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருந்து வந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக சுருளி அருவி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து, வெள்ளப்பெருக்கினால் பொதுமக்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் நிகழ்ந்து விடக்கூடாது என்ற காரணத்தினால் வனத்துறையினர் சுருளி அருவி பகுதியில் குளிப்பதற்கு நேற்று தடை விதித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று (மே 26) மழையின் அளவு குறைந்து நீர்வரத்தும் குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். மேலும், கோடை விடுமுறை முடியும் தருவாயில் இன்று விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை என்பதால், சுருளி அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடனும் மற்றும் நண்பர்களுடன் வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.