தேனி: தேனி அருகே உள்ள வீரபாண்டியைச் சேர்ந்தவர் செல்லக்காமு. இவரின் தாயார் பார்வதி அம்மாள். இவருக்கு சிறுநீரக கல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக கம்பம் பாரஸ்ட் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சிறுநீரகக் கல் அகற்றுவதற்காக நவம்பர் 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக அரசு ரூ.31,100 தொகை நிர்ணயித்துள்ள நிலையில், சிகிச்சைக்கு வரும் நபருக்கு சிகிச்சை மற்றும் தங்குமிடம் உணவு மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் வழங்குவதாக காப்பீடு திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிகிச்சை முடிந்த பின் செல்லக்காமுவிடம் தனியார் மருத்துவமனை நிர்வாகம் சுமார் 41 ஆயிரத்து 250 ரூபாய் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து செல்லக்காமு மருத்துவமனை நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: கிண்டி கலைஞர் மருத்துவமனையில் தம்பி மரணம்; முறையான சிகிச்சை இல்லை என அண்ணன் குற்றச்சாட்டு!
இதனால் சிகிச்சையில் இருந்த பார்வதி அம்மாவை மருத்துவமனை நிர்வாகம் வெளியேற்றியுள்ளது. இதனால் சிகிச்சையின் மூலமாக அவருக்கு ஏற்பட்ட தொற்றுக்கு தேனி தனியார் மருத்துவமனையில் சுமார் 8000 ரூபாய் வரை செலவு செய்து அவரின் சிகிச்சையை பூர்த்தி செய்துள்ளதாக செல்லக்காமு கூறுகிறார்.
இது குறித்து பேசிய செல்லக்காமு, “அரசு வழங்கிய காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பணத்திற்கு மேல் பணம் வசூலித்த தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளேன்.
இதில் மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை தொகையை முன்னுக்கு முரணாக பதிவு செய்திருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இப்புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். இது போல் அரசு வழங்கும் காப்பீடு திட்டத்தின் கீழ் செயல்படும் தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் அதிகம் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்த வண்ணம் உள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.