தேனி: உத்தமபாளையம் அருகே சிந்தலச்சேரியை சேர்ந்தவர் அருள் பிரகாஷ்(27). இவர் கடந்த மே மாதத்தில் பிலிப்கார்ட் செயலி மூலம் செல்போன் கவர் ஆர்டர் செய்து அதனை பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து அவரது எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது அதில், எதிர் முனையில் பேசியவர் தான் கொல்கத்தாவிலிருந்து பேசுவதாகக் கூறியுள்ளார்.
18 லட்சம் மோசடி: அருள் பிரகாஷ் எண்ணிற்கு 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை விழுந்துள்ளதாகவும், அதனை பணமாகவும் அல்லது வாகனமாகவும் பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார். பின்னர் ஒரு இணையதள முகவரி கொடுத்து. அதில் உங்களது மொபைல் நம்பரை பதிவு செய்து, உங்களுக்கான பரிசுத் தொகையைப் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மர்ம நபர் கொடுத்த இணையதளத்திற்குச் சென்ற பார்த்த போது, அவருக்கு மகேந்திரா எஸ்யூவி கார் பரிசாக விழுந்துள்ளதாகவும், அதற்கு 12,800 ரூபாய் பணம் வரியாக செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பிய அருள் பிரகாஷ் அவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு, கூகுள் பே மற்றும் வங்கிக் கணக்கு மூலம் பணத்தை அனுப்பியுள்ளார்.
12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் என்பதால் மேலும் வரி செலுத்த வேண்டும் என தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். இவ்வாறாக 11 வங்கிக் கணக்குகளுக்கு பலமுறை 17 லட்சத்து 69 ஆயிரத்து 702 ரூபாய் அனுப்பியுள்ளார். இருப்பினும் மீண்டும், மீண்டும் பணம் செலுத்த சொல்லிக் கேட்டுள்ளனர்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அருள் பிரகாஷ், தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து விசாரணையை தொடங்கிய போலீசார், அருள் பிரகாஷ்க்கு வந்த போன் நம்பர் மற்றும் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்து சோதனை செய்தனர்.
டெல்லியில் கைது: அதில் பெரும்பாலான வங்கிக் கணக்கில் மும்பையை சேர்ந்தது என்று கண்டறியப்பட்டது . பின்னர் தேனி சைபர் கிரைம் சார்பு ஆய்வாளர் தாமரைக்கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து மும்பை சென்று விசாரணை செய்ததில் அந்த வங்கி கணக்கு கூலி தொழிலாளியுடையது என்பது தெரியவந்துள்ளது.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், 'அவரின் நண்பர் ஒருவர் தன்னுடைய வாங்கி கணக்குகள் மட்டும் இன்றி மேலும் பலருடைய வங்கிக் கணக்குகளை வாங்கி அதனை டெல்லியைச் சேர்ந்த நபருக்கு கொரியர் மூலம் அனுப்பி வைத்ததாகத் தெரிவித்தார்.
பின்னர் மும்பையிலிருந்து டெல்லி சென்ற தனிப்படை போலீசார், கொரியர் சென்ற முகவரிக்கு சென்று விசாரணை செய்தனர். அதில் டெல்லி 'பித்தம்புரா ஷிவ் மார்க்கெட்' பகுதியில் உள்ள கால் சென்டர் என்று தெரியவந்தது. இந்த கால் சென்டர் போலி என்றும் அங்கு தமிழகத்தை சேர்ந்த சிலர் பணியாற்றுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கால் சென்டர் உரிமையாளர் பீகாரைச் சேர்ந்த ரோகித் குமார் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இவர் மூன்று போலி கால் சென்டர் வைத்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் பிளிப்கார்ட்டில் உள்ள பொருட்கள் ஆர்டர் செய்யும் நபர்களின் தொலைபேசி எண்களை பணம் கொடுத்துப் பெற்று, அந்த எண்ணிற்கு பரிசு விழுந்ததாகக் குறுஞ்செய்தி அனுப்பி பண மோசடி செய்து வந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார், தேனி மாவட்டத்திற்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தன்னாட்சிக் கல்லூரிகளிலும் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் - அண்ணா பல்கலை செக்!