தேனி: ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, கடந்த 2019ஆம் ஆண்டு தேனியை சேர்ந்த எட்டு இளைஞர்களிடம் இருந்து ஒரு கோடியே 11 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பெற்று ஏமாற்றிய சென்னையைச் சேர்ந்த பூகீஸ்வரனை தேனி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே தென்கரை பகுதியில் வசித்து வருபவர் சிவபாலன் (வயது 27). இவரின் உறவினரான தேனி ரத்தினம் நகர் அருகே உள்ள ஜெயம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த குகன்ராஜா, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2019ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த பூகீஸ்வரன் மற்றும் அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகியோரை சிவபாலனுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
பூகீஸ்வரன் மற்றும் அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகியோர் தங்களுக்கு ரயில்வே துறையில் உயர் அதிகாரிகளைத் தெரியும் என்றும் அவர்கள் மூலம் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனை நம்பிய சிவபாலன் மற்றும் அவருடன் அவரது நண்பர்கள் எட்டு பேர் ரயில்வே பணி வேலைக்காகப் பணத்தைக் கொடுத்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஒரு கோடியே 11 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தைக் குகன் ராஜா, பூகீஸ்வரன், ஜெயஸ்ரீ ஆகிய மூன்று பேரிடம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. பணத்தைப் பெற்றுக் கொண்ட அவர்கள் ரயில்வே துறையில் வேலைக்கான நியமன ஆணையை வழங்கியதாக கூறப்படுகிறது.
பின்னர், இந்த நியமன ஆணை போலியானது என இளைஞர்களுக்கு தெரிய வந்த நிலையில் அதிர்ச்சி அடைந்தவர்கள் இது குறித்து தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து கடந்த மார்ச் மாதம் வழக்கு பதிவு செய்த தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் குகன் ராஜா, பூகீஸ்வரன் மற்றும் அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில் அவர்களைப் பிடிக்க ஆய்வாளர் மாயாராஜலட்சுமி, உதவி ஆய்வாளர் லதா உள்ளிட்ட தனிப் படை போலீசார் சென்னை சென்று தலைமறைவாக இருந்த பூகீஸ்வரனை கைது செய்து நேற்று முன்தினம் தேனி அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட பூகீஸ்வரன் கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சி அளித்து வருவதாகவும், மேலும் அரசியல் கட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யும் தொழில் செய்து வருவதும் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் தீவிரமாகத் தேடி வருவதாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்