தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ஜக்கம்பட்டியை சேர்ந்தவர்கள் மீனாட்சி சுந்தரம் - லாவண்யா தம்பதியினர். இவர்களது மகன் ஹரிஹரனுக்கும் சென்னையை சேர்ந்த ஏகாம்பரம்-செல்வராணி தம்பதியினரின் மகள் தேன்மொழிக்கும் கடந்த 15ஆம் தேதி ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் வந்த உறவினர்கள் அளித்த மொய்ப்பணம் முழுவதையும் தொண்டு நிறுவனத்திற்கு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மதுரையில் செயல்பட்டு வரும் ஐஸ்வரியம் அறக்கட்டளை சார்பில் சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் நபர்களை மீட்டு அவர்களுக்கு இலவச சிகிச்சை சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இறுதிக் கட்டத்தில் இருக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய நபர்களுக்கு உதவும் வகையில் இலவச புதிய புற்றுநோய் பிரிவு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களும், தங்களால் முடிந்த நிதிகளை கொடுத்து உதவலாம் என அறக்கட்டளை நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து அறிந்த மாப்பிள்ளையின் தந்தை மீனாட்சி சுந்தரம் அறக்கட்டளை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தங்கள் திருமண மொய் பணத்தை நன்கொடையாக அளிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். பின்னர் திருமணம் முடிந்த நிலையில் அறக்கட்டளையின் மேலாளரிடம் திருமணத்திற்கு வந்த மொய் பணம் ஒரு லட்சத்து 90ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: சீனப் பெண்ணை தமிழர் முறைப்படி கரம்பிடித்த தேனி மாப்பிள்ளை!
இதுகுறித்து அறக்கட்டளையின் தலைவர் பாலகுரு தெரிவித்த போது, “ஆதரவற்ற நிலையில் உள்ள பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதிற்காக சிறந்த நிறுவனத்திற்கான முதலமைச்சர் விருதை முதலமைச்சரிடம் இருந்து பெற்றோம். ஆதரவற்ற நிலையில் மருத்துவ தேவைக்காக போராடும் பொது மக்களை மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதே எங்களின் நோக்கம்.
தற்போது புற்றுநோய் பாதித்து பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் மதுரையில் இலவசம் புற்றுநோய் மருத்துவ பிரிவு கட்டப்பட்டு வருகிறது. அதற்கு பொதுமக்கள் பலரும் உதவி வருகின்றனர். இதில் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த புதுமண தம்பதியினர் எங்களை தொடர்பு கொண்டு உதவுவதாக தெரிவித்தனர். அவர்களுக்கு எங்களது நன்றி. திருமணத்தில் கிடைத்த மொய் பணத்தை ஆதரவற்றோர் மருத்துவ அறக்கட்டளை நிறுவனத்திற்கு வழங்கிய புதுமண தம்பதியினரின் செயல் தேனியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.