தேனி: போதைப்பொருள் மற்றும் விளையாட்டுத் துறையில் இளைஞர்கள் கவனக்குறைவு குறித்து, தனியார் ஸ்போட்ர்ஸ் அகாடமி மற்றும் தேனி மாவட்ட காவல்துறை நடத்திய மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது.
சுமார் ஒரு மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற ஆன்லைன் பதிவில், ஒரு நபருக்கு 300 ரூபாய் நுழைவுக் கட்டணம் எனவும், சுமார் 5,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் பங்கேற்பார்கள் என கூறப்பட்டது. இதன் காரணமாக, தேனி மாவட்டம் மட்டுமின்றி கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான நபர்கள் வருகை புரிந்தனர்.
ஆண்கள், பெண்கள் உள்பட வயது வாரியாகவும் ஐந்து பிரிவுகளாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. இதில் முதல் மூண்று இடங்களைப் பிடிக்கும் போட்டியாளர்களுக்கு 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை பரிசுத் தொகை வழங்கங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த்து. மேலும், ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் 50 இடங்களைப் பிடிக்கும் போட்டியாளர்களுக்கு சைக்கிள் பரிசாக அறிவிக்கப்பட்டது.
இது மட்டுமின்றி, போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ், பதக்கம் மற்றும் டி-சர்ட் வழங்கப்படும் எனவும், தங்கும் வசதி, உணவு உள்ளிட்டவை ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியாளர்கள் குற்றச்சாட்டு: இந்நிலையில், மாரத்தான் போட்டி சரியான வழிமுறையின்றி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்து கொடுக்காமல் பல்வேறு குளறுபடிகள் செய்துள்ளதாகக் கூறி, போட்டியாளர்கள் தேனி பங்களாமேடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கூட்ட நெரிசலில் சிறுமி கீழே விழுந்து மயக்கம் அடைந்ததால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி கூட ஏற்பாடு செய்யபடவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள், பேனர்களைக் கிழித்தெறிந்து தேனி - மதுரை சாலையில் அமர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர், இது குறித்து தகவல் அறிந்த தேனி துணை காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் தலைமையிலான போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போட்டியின் நுழைவுக் கட்டணமாக 300 ரூபாயை திருப்பித் தருவதற்கான ஏற்பாடுகள் செய்வதாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியதை அடுத்து இளைஞர்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து போட்டியாளர்கள் கூறுகையில், “நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை. போட்டியில் பங்கேற்றவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களைக்கூட வழங்கவில்லை. போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பாட்டால், அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்கவில்லை” என தெரிவித்தனர்.
மேலும், தேனி மாவட்ட காவல்துறையும் இணைந்து நடத்தும் போட்டி என்பதால்தான், வெளியூர்களில் இருந்து நம்பிக்கையுடன் வந்தோம். ஆனால் இப்போது ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 23 ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை: கவலையில் மீனவர்கள்..