சென்னை: சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் பிரபல தனியார் நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையை நடத்தி வரும் ஜெயந்திலால் சலாணி நகைக்கடை சங்கத் தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது கடையில், பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனது கடையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளி பொருட்கள் மாயமானதை சலாணி கண்டுபிடித்துள்ளார். மேலும், கடையில் உள்ள பல இடங்களில் வெள்ளி பொருட்கள் தேடிப் பார்த்துள்ளார். அப்போதும், வெள்ளி பொருட்கள் கிடைக்காததால் காணாமல் போன வெள்ளி பொருட்களைக் கணக்கிட்டுப் பார்த்துள்ளார்.
அப்போது, சுமார் ஒரு கோடி 80 லட்சம் மதிப்பிலான 222 கிலோ வெள்ளி நகைகள் செய்வதற்கான வெள்ளிக் கட்டிகள் திருடு போனது தெரிய வந்தது. இதற்கிடையில், இவரது கடையில் பணிபுரிந்து வந்த சரவணன்,அஜ்மல், மகேந்திரன், வினோத், பிரகாஷ் மற்றும் மதன் என பணிபுரிந்து வந்த ஆறு ஊழியர்களும் வேலைக்கு வராமல் இருந்துள்ளனர். சந்தேகம் அடைந்த ஜெயந்திலால் சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் வெள்ளிப் பொருள்களைக் கொள்ளையடித்துத் தப்பியோடிய சரவணன் உள்ளிட்ட ஆறு நபர்களைத் தேடி வருகின்றனர்.