திருப்பத்தூர்: திருப்பத்தூர் அட்சயா நகர் பகுதியில், புதிய வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 8 கிலோ பித்தளை பொருட்கள், அரைக்கிலோ எடையுள்ள 2 குத்துவிளக்குகள் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் குறித்து, திருப்பத்தூர் நகர காவல் நிலைய போலீசார் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர், அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர், செந்தில் (34). இவர் கடந்த 7 மாதத்திற்கு முன்பாக அட்சயா நகர் பகுதியில் ஒரு புதிய வீட்டினை வாங்கி, அதில் குடும்பத்துடன் குடியேறியுள்ளார். இதனையடுத்து, புதிய வீட்டில் 10 நாட்கள் மட்டும் இருந்த நிலையில், குழந்தைகளுக்கு புதிய வீட்டில் இருப்பதற்கு பயம் உண்டாகியுள்ளது என்று அவர்கள் வசித்து வந்த அண்ணாநகர் பகுதியில் உள்ள பழைய வாடகை வீட்டிற்கு மீண்டும் சென்றுள்ளனர்.
இந்நிலையில், அட்சயா நகர் பகுதியில் இருந்த புதிய வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், வீட்டிற்குள் இருந்த 8 கிலோ பித்தளை பொருட்கள், பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த அரைக்கிலோ எடையுள்ள 2 குத்துவிளக்குகள் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கப் பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, செந்தில் திருப்பத்தூர் நகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் நகர காவல் நிலைய போலீசார், கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, இந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திருட்டு சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. அப்போது போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், அது தொடர்பாக இதுவரை போலீசார் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில், தற்போது மீண்டும் இந்த வீட்டில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளதாக அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளைச் சம்பவங்களை தடுப்பதற்காக, இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு, 19 ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை எஸ்.பி ஆல்பர்ட் ஜான் வழங்கியுள்ளார். ஆனால், போலீசார் எவரும் ரோந்துப் பணியில் ஈடுபடுவதாக தெரியவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்; "நாடு விரைவில் பாஜகவை தூக்கி எறியும்" - கனிமொழி எம்பி