சென்னை: ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்திருந்தனர். அப்போது அவர்கள், தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி தங்களது பணத்தை ஏமாற்றிவிட்டதாக கூறி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு வழங்கினர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறும்போது,
ராணிப்பேட்டையை சேர்ந்த சசிகலா, அலெக்ஸ் பாண்டியன், சாரதி உள்ளிட்டோர் தங்க நாணய முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி கோடிக்கணக்கில் தங்களை ஏமாற்றிவிட்டதாக தெரிவித்தனர். மேலும், ஒரு கிராமுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியும், 10 ஆயிரம் ரூபாய் திட்டத்தில் முதலீடு செய்தால் 6 மாதம் கழித்து 10 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என நம்ப வைத்ததால், முதலீடு செய்து ஏமார்ந்து விட்டதாக கூறினர்.
இதே போல ராணிப்பேட்டை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் ''நியூ லைவ்'' என்ற திட்டத்தில் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர். இது தொடர்பாக ராணிப்பேட்டை எஸ்.பி அலுவலகத்திலும், டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் தற்போது மீண்டும் புகார் கொடுத்துள்ளோம் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும், சசிகலா, அலெக்ஸ் பாண்டியன், சாரதி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக கேள்வி எழுப்பினால் தங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கையே கருகி போச்சு.. பெண் மருத்துவர் உயிரை பறித்த லேப்டாப் சார்ஜர்.. சென்னையில் சோகம்!