சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் 'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் சிறப்பு பயிற்சிக்காக லண்டன் சென்று சிறப்பாக பயிற்சியை நிறைவு செய்து சென்னை திரும்பிய மாணவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளுடன் வேலை வாய்ப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில், தற்போது லண்டனில் உள்ள நியூ கேஸ்டல் துர்ஹாம் பல்கலைக்கழகத்திற்கு ஒருவார காலம் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் ஆகிய பயிற்சிகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து 15 பொறியியல் மற்றும் 10 அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர்.
இவர்கள் தற்போது பயிற்சிகளை சிறப்பாக நிறைவு செய்துவிட்டு விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னை திரும்பினர். லண்டனில் இருந்து சென்னை திரும்பிய 25 மாணவர்களை அவர்களது பெற்றோர் மற்றும் அரசு அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
இதுகுறித்து, 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற மாணவர்கள் கூறுகையில், '' நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இணைந்து நிறைய பயிற்சிகள் பெற்றதால் வெளிநாட்டில் பயிற்சி பெறுவதற்கு மிகவும் ஏதுவாக இருந்தது. மேலும், இத்திட்டத்தின் மூலம் வெளிநாடு சென்றது ஒரு புது அனுபவமாகவும் , குறிப்பாக முதல் முறையாக விமானத்தில் செல்வதற்கான வாய்ப்பும் கிடைத்தது" என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மேலும், "இந்த பயிற்சியின் மூலம் பல்வேறு வேலை வாய்ப்புகள் அதிகப்படியாக வருவதாகவும் இந்த புதிய அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கும், தமிழக முதலமைச்சருக்கும், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றி" எனவும் மாணவர்கள் உற்சாகமாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தேசிய குத்துச்சண்டை போட்டியில் மயிலாடுதுறை கல்லூரி மாணவிகள் சாதனை!