சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் பனையூர், உத்தண்டி, அக்கரை, நீலாங்கரை, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கடற்கரைக்கு தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகப்படியான பொதுமக்கள் இளைப்பாறுவதற்காக வருவது வழக்கம். அதேபோல், காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்வதற்கும் மக்கள் அதிகமாக கடற்கரை நோக்கி வருகின்றனர்.
பொதுமக்கள் அச்சம்: மேலும், வார இறுதி நாட்களில் மீன்கள் வாங்கவும் இப்பகுதியில் பொதுமக்கள் குவிகின்றனர். இந்த நிலையில், பனையூர், உத்தண்டி, அக்கரை, நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் உள்ள மணல் பரப்பு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக திடீரென கருப்பு நிறத்தில் மாறியுள்ளது. இதன் காரணமாக மணல் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கருப்பாக காணப்படுகிறது.
இதனால் அப்பகுதிகளுக்கு பொழுதுபோக்கிற்கும், நடைபயிற்சி செய்வதற்கு வரும் பொதுமக்களும், கடற்கரையில் விளையாடுவதற்கு வரும் நபர்களும் கடலிலிருந்து ஏதோ கழிவுப் பொருட்கள் கரை ஒதுங்கி இருப்பதால் மணல் பரப்பு கருப்பாக மாறி உள்ளதாக எண்ணி, அதில் கால் வைக்க அச்சப்படுகின்றனர். அத்துடன், நோய்த்தொற்று ஏதாவது ஏற்படும் என பயந்து, அந்த பகுதிகளுக்குச் செல்லவே தயக்கம் காட்டி வருகின்றனர்.
மீனவர் விளக்கம்: இதுகுறித்து பனையூர் கடற்கரையை ஒட்டி உள்ள மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களிடம் கேட்டபோது, ''கடற்கரை மணற்பரப்பு பொதுவாக பழுப்பு, வெள்ளை, கருப்பு, மஞ்சள் என பல வண்ணங்களில் அடுக்குகளாக இருக்கும். கடல் சீற்றம் அதிகம் காணப்படும்போது, கடற்கரையில் உள்ள மணற்பரப்பின் மேல் அடுக்கில் உள்ள வெள்ளை நிற மணல், அரிப்பு ஏற்பட்டு, அடியில் உள்ள கருப்பு மண் வெளிப்படும்.
ஆண்டுதோறும் ஆடிமாதம் முடிந்ததும் இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டு, அடுத்த ஓரிரு மாதத்தில் கடல் அலையின் சீற்றம் குறைந்த பிறகு, மீண்டும் கருப்பு நிறமாக உள்ள மணல் மீது வெள்ளை நிற மணல் பரப்பிக் கொண்டு இயல்பு நிலைக்கு மாறிவிடும் என்றும், இதனைக் கண்டு அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தனர்.
நோய்த்தொற்று அபாயம்: மேலும், இது போன்ற நிகழ்வு டிசம்பர் மாதம் வரை மாறி மாறி ஏற்படும். கடற்கரையில் மணல்கள் கருப்பு நிறமாக மாறி உள்ளதால் ஆமைகளுக்கும், மீன்களுக்கும் மற்றும் சில உயிரினங்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை எனவும், இதனால் எந்த ஒரு நோய்த்தொற்றும் ஏற்படாது'' எனவும் தெரிவித்தனர்.
இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் வெங்கட் ஈடிவி பாரத் தமிழிடம் கூறியதாவது, “சென்னை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள சில கடற்கரைகளில் மணல் பரப்பு கருப்பு நிறமாக மாறியுள்ளது. இது இயல்பான ஒன்றுதான், இதனைக் கண்டு பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. ஆடி மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை, காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடலில் இருந்து வரும் அலைகள் வேகமும் வேகமாக இருக்கும்.
உயிரினங்களுக்கு பிரச்னை இல்லை: இதனால் வேகமாக மணல் பரப்பின் மீது அலை மோதும் போது, மேற்பரப்பில் உள்ள வெள்ளை நிற மணல் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு, கருப்பு நிற மணல் வெளிப்படும். இதுபோல ஏற்படும் கருப்பு நிற மண்ணால் எந்த ஒரு நோய்த்தொற்று அபாயமும் ஏற்படாது. மேலும், ஆமைகள், நண்டுகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
மழைக்காலங்களில் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் இருந்து அதிகப்படியான தண்ணீர் கடலில் கலக்கும். அப்போது கழிவுகளும் சேர்ந்து கடலில் கலக்கும் போது, அந்த இடத்தைச் சுற்றி மட்டும் கடற்கரை கருப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாக மாறும். அதில் சில தொற்றுகள் மற்றும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலைகளில் சில இடங்களில் கடற்கரைகளில், குப்பை கழிவுகள் கரை ஒதுங்குகின்றன. இவைகள் எங்கிருந்து ஒதுங்குகின்றன என்பதை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அதற்குண்டான நடவடிக்கை எடுத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்'' என இவ்வாறு தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: மழைக்காலத்திற்கு தயாரா? வெள்ளம் வந்தால் செய்ய வேண்டியவை! செய்யக் கூடாதவை!