ஈரோடு: நாடாளுமன்ற மக்களவைக்கான 18-வது தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வாக்குச்சாவடிக்கு நேரில் செல்ல முடியாத நிலையில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் நேரில் சென்று வாக்கு அளிக்க முடியாத மாற்று திறனாளிகள் ஆகியோருக்கான தபால் வாக்குகள் பெறும் பணி இன்று (ஏப்.4) காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று ஈரோடு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 85 வயதிற்கும் மேல் உள்ள முதியவர்களுக்கான தபால் வாக்குகள் பெறும் பணி நடைபெற்று வருகிறது. ஈரோடு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, திருப்பூர் மாவட்டம் காங்கயம், தாராபுரம், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆகிய ஆறு தொகுதிகள் அடங்கும்.
இதில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளில் 85 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 21 ஆயிரத்து 805 பேரும், மாற்று திறனாளிகள் 9 ஆயிரத்து 824 உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தபால் வாக்கு போடும் படி கடந்த மூன்று நாட்களாக படிவம் 12D வழங்கும் பணி நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்து 201 முதியவர்களும், 800 மாற்று திறனாளிகளும் தபால் வாக்கு செலுத்த சம்மதம் தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் தாங்களாகவே நேரில் சென்று வாக்கு அளிக்கிறோம் என்று தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், விருப்பம் தெரிவித்த 3001 நபர்களின் தபால் வாக்குகளை நேரில் பெறும் பணியை இன்று அந்தந்த தொகுதி மண்டல அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன், காலை 7 மணி முதல் துவங்கி 3 குழுக்களாக பிரிந்து மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை அலுவலர்கள் பெற்று வருகின்றனர். இந்த பணிகள் வரும் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் விடுபட்டவர்கள் வாக்கு செலுத்த 8ம் தேதி வாய்ப்பு அளிக்கப்படும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மூலமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: "ஏப்.19 அன்று வீட்டில் சீரியல் பார்க்காமல் விரைவாக சென்று வாக்கு செலுத்துங்கள்" - பரப்புரையின் போது அமைச்சர் அட்வைஸ்! - Lok Sabha Election 2024