சென்னை: சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் மக்கள் கல்வி கூட்டியகத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில் மக்கள் கல்வி கூட்டியகத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் பேசுபாேது, "சென்னை பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மாணவராகவும், சென்னை மாநிலக் கல்லூரியின் பேராசிரியராகவும், சிலக் கல்லூரிகளின் முதல்வராகவும் நான் பணியாற்றியுள்ளேன்.
நாங்கள் படிக்கும் காலத்தில் கல்லூரிகளில் தமிழ் மன்றம், மாணவர் மன்றம், மாணவர் மன்றத் தலைவருக்கான அறை போன்றவை இருந்தது. நாங்கள் கல்லூரிகளில் அரசியல் குறித்தும் பேசினோம். அப்போதேல்லாம் ரூட்டு தல என்ற பிரச்சனை இல்லாமல் இருந்தது.
ஆனால், தற்பொழுது பேராசிரியர்களுக்கு மதிப்பளிப்பதை காட்டிலும் ரூட்டு தலயை பார்த்து மாணவர்கள் மதிப்பளிப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். கல்லூரிகளில் உள்ள பிரச்சனைகளை கொண்டு செல்வதற்கும், மாணவர்கள் அரசியல் சார்ந்த நிகழ்வுகளை தெரிந்துக் கொண்டு, நல்லத் தலைவர்களை தேர்வு செய்யவும் மாணவர் மன்றம் போன்றவை தேவைப்படுகிறது.
குறிப்பாக கல்லூரிகளில் மாணவர் சங்கத் தேர்தலை நடத்தும் பொறுப்பும் அரசுக்கு உள்ளது. 2014ஆம் ஆண்டிற்கு பின்னர் கல்லூரிகளில் மாணவர் சங்கத் தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே, கல்லூரிகளில் மாணவர் சங்கத் தேர்தலை நடத்துவது குறித்து அனைத்துகட்சிகளின் மாணவர் அணியை அழைத்து அரசு ஆலோசனை நடத்த வேண்டும்.
இதையும் படிங்க: தமிழகத்தை உலுக்கிய நாவரசு படுகொலை.. ராகிங் தடுப்பு சட்டம் உருவான பின்னணி..!
மேலும், மாணவர் சங்கத் தேர்தல் நடத்தாமல் இருப்பது வரும் காலங்களில் அவர்களுக்கு எதிராகவே அமையும். தற்பொழுது உள்ள மாணவர்களுக்கு நல்லத் தலைவர்கள் யார் என்பதை அறிய முடியாமல் உள்ளனர். சினிமாவை பார்த்து அவர்களை தலைவர் என கூறுகின்றனர்.
கல்லூரிகளில் கஞ்சா, போதைப் பொருட்களும் ரூட்டு தல மாணவர்கள் மூலம் வருவதாக கூறப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கு கட்டணங்கள் குறித்து கேட்கவும், அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கும் மாணவர் சங்கத் தேர்தலை அரசு நடத்த வேண்டும்.
கல்லூரிகளில் இருந்து அரசியல் அகற்றல் அனுமதிக்க முடியாது. ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர் சங்கத் தேர்தலை மறுப்பதை ஏற்க முடியாது. ரூட்டு தல பிரச்சினை குறித்தும், கல்லூரிகளில் மாணவர் சங்கத் தேர்தல் நடத்துவது குறித்தும் இடதுசாரி அமைப்பு மற்றும் தேசிய மாணவர் சங்கங்களை அழைத்து உயர் கல்வி அமைச்சரும், முதலமைச்சரும் பேச வேண்டும்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்