சென்னை: சென்னையை அடுத்த திருவேற்காட்டைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் ஆன்டனி கிளமென்ட் ரூபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், வீடுகளில் செல்லப் பிராணிகள் வளர்ப்போர், விடுமுறை அல்லது தொழில் காரணமாக வெளியூர்களுக்கு செல்லும் போது, பிராணிகளை பராமரிப்பு மையங்களில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி அவற்றை அங்கு சேர்த்துச் செல்கின்றனர். நாட்டில் பல முறைப்படுத்தப்படாத செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
முறையான தகுதியில்லாத நபர்களை பராமரிப்பாளர்களாக நியமித்துள்ள இந்த மையங்களில், பிராணிகள் உரிய முறையில் பராமரிக்காமல் சில நேரங்களில் அவை இறந்து விடுகின்றன.
எனவே, வர்த்தக நோக்கில் செயல்படும் இதுபோன்ற மையங்களை ஆய்வு செய்த பிறகே ஒப்புதல்கள் வழங்கவேண்டும் எனவும், இதுபோன்ற மையங்களை முறைப்படுத்துவதற்காக, பிரிட்டனில் 2018 ம் ஆண்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், பிரிட்டனைப் போல செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களை முறைப்படுத்த தனி விதிமுறைகளை வகுக்கக் கோரி அரசுக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மிருக வதை தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு என தனி விதிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ஆன்டனி அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வு, மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து எட்டு வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: 'அப்பாவுக்கு நடந்த மாதிரி ஆகிவிடும்'.. தபால் வாக்குகளை முதலில் எண்ண வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி