சென்னை: வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக உள்ள கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரை சிறைத்துறை டிஐஜி வீட்டு வேலைக்கு அழைத்து சென்றதாகவும், பின் அங்கு பணம் நகையை திருடியதாகக் கூறி அவரை தாக்கியதாகவும், அவரது தாய் கலாவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், டிஐஜி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். எம் சுப்பிரமணியம், வி.சிவஞானம் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ. ராஜ்திலக், இந்த விவகாரத்தில் சிபிசிஐடி எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கூடுதல் அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதனை அடுத்து, இந்த அறிக்கையில் வீட்டுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட சிறை கைதிகள், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளதே? அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதா? என கேள்வி எழுப்பினர். இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டிஐஜி உள்ளிட்டோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? எனவும் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: "தங்கலான் ஓ.டி.டி ரிலீஸுக்கு தடையில்லை" - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், சிறை குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். சிறைக்கு வெளியே நடந்த சம்பவத்திற்கு எப்படி சிறை குற்ற வழக்குப் பதிவு செய்ய முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சிறையில் உள்ள விலை உயர்ந்த தேக்கு மரத்தை வெட்டி கட்டில் உள்ளிட்டவை செய்ததாகவும், நல்ல சம்பளத்துடன் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இது போன்ற புகார்கள் வருவதாக வேதனை தெரிவித்தனர்.
மேலும், கடைநிலை ஊழியர் ஒருவர் பக்கத்து வீட்டுக்காரரிடம் சண்டை போட்டால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இவ்வளவு பெரிய குற்றத்தில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்