சென்னை: தமிழகத்தில் இருக்கும் மொத்த மக்கள்தொகையில், 18.49 சதவீத மக்களே ஆங்கில மொழியையும் பேசகூடியவர்கள் என்கிறது தி லாங்குவேஜ் அட்லஸ் ஆஃப் தமிழ்நாடு (The Language Atlas of Tamil Nadu) மேற்கொண்ட ஓர் ஆய்வு. குறிப்பாக, 2.11 சதவீத மக்களே இந்தி மொழி பேசுபவர்கள் என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
2011ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தி லாங்குவேஜ் அட்லஸ், தமிழநாட்டில் எத்தனை மொழி பேசப்படுகிறது என்ற ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வுகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையகம் (RG&CCI) தற்போது வெளியிட்டுள்ளது.
திராவிட மொழி பேசும் மக்கள்: 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 மக்கள் இருந்துள்ளனர். அதன்படி, தி லாங்குவேஜ் அட்லஸ் இந்த கணக்கெடுப்பு தரவை கீழ்வரும் ஆய்வுக்கு பயன்படுத்தியுள்ளது.
அப்படி, தமிழ்நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 96.20 சதவீத மக்கள் தமிழ் மொழியையும், 8.05 சதவீத மக்கள் தெலுங்கு, 2.59 சதவீத மக்கள் கன்னடம் மொழியையும், 1.40 சதவீத மக்கள் மலையாளம் மொழியையும் பேசுகின்றனர். இவர்கள் பேசும் இந்த மொழிகள், அவர்களின் தாய் மொழியாகவோ அல்லது அவர்களின் முதல் அல்லது இரண்டாம் பட்ட மொழியாக இருக்கிறது என்கிறது இந்த ஆய்வு.
அங்கம் வகிக்கும் 5 முக்கிய மொழிகள்: மாநிலம் முழுவதும் உள்ள மொழி பேசுபவர்களின் அடிப்படையில், 6 கோடியே 37 லட்சத்து 53 ஆயிரத்து 997 மக்கள் தமிழ் மொழி பேசுபவர்களாகவும், 42 லட்சத்து 34 ஆயிரத்து 302 பேர் தெலுங்கு மொழி பேசுபவர்களாக இருக்கின்றனர். அதனை தொடர்ந்து, 12 லட்சத்து 86 ஆயிரத்து 175 மக்கள் கன்னடம் மொழி பேசுபவர்களாகவும், 12 லட்சத்து 64 ஆயிரத்து 537 மக்கள் உருது மொழியையும், 7 லட்சத்து 26 ஆயிரத்து 96 பேர் மலையாளமும் பேசுகின்றனர்.
இதுமட்டுமல்லாது, மற்ற மொழி பேசுபவர்கள் 8 லட்சத்து 81 ஆயிரத்து 923 பேர் உள்ளனர். தமிழகத்தில், 24 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மூன்று மொழிகளைப் பேசக்கூடியவர்கள் (Trilingual) எனவும் மும்மொழி பேசுபவர்களைத் தவிர்த்து, 1.79 கோடிக்கும் அதிகமான மக்கள் இரு மொழிகளைப் பேசக்கூடியவர்கள் (Bilinguals) என அட்லஸின் ஆய்வு கூறுகிறது.
மொழி கணக்கெடுப்பின் அவசியம்: 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில், வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாட்டின் லாங்குவேஜ் அட்லஸ், மாநிலவாரியாக வெளியிடப்பட்ட இரண்டாவது பெரிய லாங்குவேஜ் அட்லஸ் என்கிறது அந்த அமைப்பு. இந்த ஆய்வால், மக்கள் மத்தியில் இருக்கும் மொழியின் அச்சுக்கலை, அதன் புவியியல் பரவல், இருமொழி மற்றும் மும்மொழி போன்றவை வெளிப்படுகிறது.
அது மட்டுமல்லாது, 17 திராவிட மொழி பேசுபவர்கள் தமிழகத்தில் இருந்த நிலையில், தற்போது 14 மொழிகளை பேசுபவர்களே உள்ளனர் என ஆய்வு தெரிவிக்கிறது. ஜடாப்பு (Jatapu), கோலாமி(Kolami), கோயா(Koya) ஆகிய 3 திராவிட மொழி பேசுபவர்கள் தற்போது தமிழகத்தில் இல்லை என அதிர்ச்சியளிக்கும் தகவல்களும் வெளிவந்துள்ளது.
திராவிட மொழிகளை தவிர்த்து பிற மொழிகள் பேசுபவர்கள் தமிழகத்தில் இல்லையா என்ற கேள்விக்கு, தமிழகத்தில் ஆங்கிலம், பெங்காலி, கொங்கணி, மராத்தி, பஞ்சாபி, சிந்தி, இந்தி, உருது பேசும் மக்களும் கணிசமான அளவில் இருக்கின்றனர் என்கிறது இந்த ஆய்வறிக்கை.
2021-22 களத் தரவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்திய-தமிழ்நாடு மொழியியல் ஆய்வின் (LSI-TN) அறிக்கையை RG&CCI முன்பு வெளியிட்டிருந்தது. அதில், தென் இந்தியாவில் 60 மில்லியன் தமிழ் பேசும் மக்கள் இருப்பதாகவும், உலகளவில் 68 மில்லியன் பேர் தமிழ் பேசுபவர்களாக இருப்பதாகவும் இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.