திருப்பூர்: தமிழகத்தின் மேற்கு மண்டல பகுதிகளில் வள்ளி கும்மி, பவளக்கொடி கும்மி, காத்தவராயன் கும்மி போன்ற நாட்டுப்புற கும்மி மற்றும் ஒயில் ஆட்டக்கலைகள் தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
அதுவும், பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் கோவில் திருவிழாக்களால் என்றால் இந்த கும்மியாட்டம் நிகழ்வுகள் நிச்சயம் இடம்பெறும் அளவிற்கு மக்கள் ஆர்வம் காட்டும் பாரம்பரிய கலையாகும். இந்நிலையில், இன்று திருப்பூர் சொர்ணபுரி ரிச் லேண்ட் பகுதியில் நவீன் பிரபஞ்ச வள்ளி கும்மி குழுவின் கும்மி ஆட்ட அரங்கேற்ற விழா நடைபெற்றது.
இந்த விழாவில் குடும்பப் பெண்கள், கல்லூரி மாணவிகள், வெளிநாட்டில் பணியாற்றும் தமிழ் பெண்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கும்மி அரங்கேற்றம் செய்தனர். வள்ளி முருகன் திருமணம் பற்றிய நாட்டுப்புறப் பாடலுக்கு ஒய்யாரமாக கும்மி ஆடியதை அந்த பகுதி மக்கள் திரளாக கண்டு ரசித்தனர்.
இந்நிலையில் ஒவ்வொரு பகுதியிலும் திருவிழா காலங்களில் நடன கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களே கலை நிகழ்த்தும் நிலையில், திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மண்டல பகுதிகளில் சமீபகாலமாக, பொதுமக்கள் மற்றும் சாமானிய குடும்ப பெண்கள் கும்மி கலையை கற்றுக்கொண்டு ஆடுவதால், வள்ளி கும்மி பவளக்கொடி கும்மி உள்ளிட்ட கலைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வள்ளி கும்மி நவீன் பிரபஞ்சன் நடனக்குழு பயிற்சியாளர் நவீன் கூறுகையில், “ இந்த கலை அழிவின் விளிம்பில் இருந்த கலையாகும், இந்த கலையை ஆண்கள் மட்டும் பாரம்பரியமாக கொண்டு செய்து வந்த நிலையில், தற்போது பெண்கள் இதில் களமிறங்கியுள்ளனர். மேலும் வெளிநாடுகளில் இருந்துக் கூட இந்த கலையை பழகிக் கொள்ள ஆசைப்படுகிறார்கள். இந்த கலையை பயிற்சி செய்வதால், மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் கிடைக்கிறது. இன்றைக்கு பெண்கள் இந்த வள்ளி கும்மியை ஜும்பா, ஏரோபிக்ஸ் போன்று கற்றுக் கொள்ளுவதில் ஆர்வம் காட்டிகிறார்கள்” என்றார்.
மேலும் வள்ளி கும்மி கலை குறித்த நடன குழு உறுப்பினரான ரிதன்யா கூறுகையில், “ நான் பெங்களூருரில் கல்லூரி படித்து வருகிறேன். இந்த கலையை 3 மாதமாக கற்று வருகிறேன். இந்த கலை மூலமாக நான் ரிலாக்ஸ் ஆகிறேன் அதுமட்டுமின்றி, கடவுள்களின் புராண கதைகளை நாங்கள் கற்று, அதை ஆடல் மூலம் பிறருக்கு தெரிவிக்கிறோம். மேலும் இதன் மூலம் எங்களுக்கு மேடை பயம் நீங்கி, பொதுவெளியில் தயக்கமற்று பேசும் திறன் உருவாகிறது” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: காலையில் காகிதம் பொறுக்கியவர்..மாலையில் ஊழியர்... அமைச்சர் மா.சு. செய்த நெகிழ்ச்சி சம்பவம்!