சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில், திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், அதற்கான விருப்ப மனுக்களை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் சமர்ப்பித்து வருகின்றனர்.
முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான படிவங்கள், கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் திமுக தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டு வந்தது. பின்னர், கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் திமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனுவை பூர்த்தி செய்து படிவத்துடன், ரூ.50 ஆயிரம் கட்டணத்தைச் செலுத்தி தலைமை அலுவலகத்தில் வழங்கி வந்தனர்.
இந்த நிலையில், இன்று (மார்ச் 7) மாலை 6 மணியுடன் விருப்ப மனு வழங்குவது நிறைவு பெறுவதால், காலை முதல் விருப்ப மனுக்கள் திமுக தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, திமுக சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, ஆ.ராசா உள்ளிட்ட பலர் நேரடியாக வந்து, மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை வழங்கினர்.
இதையும் படிங்க: பொம்மைகள், பள்ளி புத்தகப்பையோடு அடக்கம் செய்யப்பட்ட புதுச்சேரி சிறுமியின் உடல்.. ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க ஊர்வலம்!