சென்னை: சென்னை மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் இன்று (அக்.29) நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, சென்னை மாநகராட்சி பகுதிகளில் தற்போது 7 அரசு மருத்துவமனைகளில் உட்பட மொத்தம் 388 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அம்மா உணவகத்தை மேம்படுத்த 21 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது அம்மா உணவகத்தில் தேவைப்படும் சில்லறை செலவினங்களுக்கு 24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவு அரைக்கும் இயந்திரங்கள் பழுது, கோதுமை அரவை கூலி, போக்குவரத்து செலவினங்கள், பணியாளர்களுக்கு தேவையான கையுறை உள்ளிட்ட பொருட்கள், பில்லிங் இயந்திரங்களுக்கு தேவையான பேப்பர் ரோல்கள் வாங்கி வழங்குதல் என சில்லறை செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குத்தகை: ஷெனாய் நகர் அம்மா அரங்கம் மற்றும் தி.நகர் சர் பிட்டி தியாகராய அரங்கங்களை தனியாருக்கு குத்தகை விட சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஷெனாய் நகர் அம்மா அரங்கம் மற்றும் தி.நகர் சர் பிட்டி தியாகராய அரங்கங்களில் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் நடைபெறும். அம்மா அரங்கம் மற்றும் சர் பிட்டி தியாகராய அரங்கங்களை பாரமாரிப்பதில் மாநகராட்சி மூலம் போதிய வருவாய் ஈட்டாத காரணத்தால், 5 ஆண்டுகளுக்கு தனியாருக்கு குத்தகை விட அனுமதி அளித்து வாடகையை மறு நிர்ணயம் செய்து தனியாருக்கு குத்தகை விட சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.
இதையும் படிங்க: அமைச்சர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா?-உதயநிதி டிஷர்ட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு கேள்வி
இதன் மூலம் ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் தற்போதைய வாடகை ரூபாய் 3.40 லட்சம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில, தனியாருக்கு டெண்டர் விடப்பட்ட பின்னர் ரூபாய் 5.42 லட்சமாக வாடகை வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சர் பிட்டி தியாகராய அரங்கம் வாடகை 20 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டு வரும் நிலையில், தனியாருக்கு டெண்டர் விடப்பட்ட பின்னர் உயர்த்தப்படும் வாடகை 50 ஆயிரம் ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி 9 ஆயிரம் என மொத்தம் 59,000 ரூபாய் வாடகை நாள் ஒன்றுக்கு வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புல் விளையாட்டுத் திடல்கள்: சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்களை பராமரிக்க வேண்டி உள்ளதால், சென்னை மாநகராட்சிக்கு நிதி சுமையை குறைக்க நிலையான வருவாய் பகிர்வு அடிப்படையில், Online e-Tender முறையில் தனியாருக்கு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வியாசர்பாடி முல்லை நகர், திரு.வி.க நகர் விளையாட்டு மைதானம், கே.பி.பார்க் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட 9 செயற்கை புல் விளையாட்டுத் திடல்களை சந்தை விலை விவரத்தின் அடிப்படையில் பயனர் கட்டணம் விலை நிர்ணயம் செய்ய தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 120 ரூபாய் வீதம் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு 93.31 லட்சம் வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்