மதுரை: மதுரை அரசு அருங்காட்சியகம் சார்பாக, பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த மே 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில், தற்போது பல்லாங்குழி, தட்டாங்கல் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.
இந்நிலையில் 3ஆம் நாளான இன்று(மே.13) தாயம் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில், மதுரையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குடும்பத் தலைவிகளும், பள்ளி, கல்லூரி மாணவர்களும், வயது முதிர்ந்த பெண்மணிகளும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இதில், பங்கேற்ற நரிமேட்டைச் சேர்ந்த ஷமீம், ஐயர் பங்களாவைச் சேர்ந்த சோஃபியா ரோஸ்லின், செல்லூரைச் சேர்ந்த நதியா ஆகியோர் கூறுகையில், "நமது பாரம்பரிய விளையாட்டுகளை நினைவுபடுத்தும் வகையில், அரசு அருங்காட்சியகம் சார்பாக நடைபெறும் இந்த போட்டி வரவேற்கத்தக்கது. இது போன்ற விளையாட்டுகளின் மூலமாகத் தான் சாதி, மதம் சிறியவர், பெரியவர் என்ற ஏற்றத்தாழ்வு இன்றி சமத்துவ எண்ணத்தை உருவாக்க முடியும்.
தற்போது செல்போன், கணினி, தொலைக்காட்சி என தங்களது வாழ்க்கை முறையை இன்றைய இளைய தலைமுறையினர் சுருக்கி கொண்டு விட்டனர். அந்த நிலையை மாற்றுவதற்கு நமது பாரம்பரிய விளையாட்டுகளை அவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
தாயம் போன்ற விளையாட்டுகளில் கணிதம் மற்றும் திட்டமிடும் திறன் மேம்படுகிறது. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் உருவாகிறது. நமது பாரம்பரிய விளையாட்டுகளை அழிவு நிலையில் இருந்து மீட்டு அடுத்து வருகின்ற தலைமுறைக்கு கற்றுத் தர வேண்டும்" என்றனர்.