திருநெல்வேலி: பொதுவாக மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் மனதில் இருக்கும். அதில் பல ஆசைகள் நிறைவேற முடியாமல் போகலாம். ஆனால், தாங்களின் கனவுகளை நினைவாக்கும் முயற்சியில் இறங்குபவர்கள் வெகுசிலரே. அந்தவகையில், வானில் பறக்க வேண்டும் என்ற தங்களது 10 ஆண்டு கனவை, கடும் முயற்சி எடுத்து நிறைவேற்றிக் கொண்டுள்ளனர் தாட்டான்பட்டி கிராம மக்கள்.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள தாட்டான்பட்டி என்ற கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் விவசாயத்திலும், பெண்கள் பீடி சுற்றும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள இளைஞர்கள் ராணுவம் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இக்கிராமத்து மக்கள் தங்கள் ஒற்றுமையைப் பலப்படுத்தும் விதமாக அனைவரும் ஒன்றிணைந்து, ஆண்டு தோறும் பல்வேறு இடங்களுக்குச் சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
பேருந்து மற்றும் ரயில்கள் மூலமாகச் சுற்றுலா சென்ற மக்கள், தங்கள் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விமானத்தில் சென்று வருவதை அறிந்து, தாங்களும் ஒரு நாளாவது விமானத்தில் பறக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளனர். விண்ணில் பறக்கும் விமானத்தை, தூரத்திலிருந்து பார்த்து ரசித்த கிராம மக்கள் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றக் கடந்த 10 ஆண்டுகளாகச் சிறுசேமிப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
விமானத்தில் கோவாவிற்குச் சுற்றுலா செல்ல வேண்டும் என்று திட்டமிட்டபடி, நான்கு மாதங்களுக்கு முன்பாக இதற்கான டிக்கெட்டுகளை முன் பதிவு செய்த தாட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 130 பேர், ஜனவரி 2024 ல் கோவாவிற்குச் சுற்றுலா சென்றுள்ளனர். இதுவரை தூரத்தில் பார்த்த விமானத்தை, கையில் எட்டிப் பிடித்த மகிழ்ச்சியில் ஆரவாரத்துடன் அனைவரும் விமானத்தில் ஏறி ஆகாயத்தில் பறந்தனர். பின்னர், 2 நாட்களுக்குக் கோவாவில் தங்கி இருந்து சவேரியார் ஆலயம் உள்பட பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்து தங்களது 10 ஆண்டு ஆசைகள் நிறைவேறிய மகிழ்ச்சியில் ரயிலில் ஊர் திரும்பினார்.
இது குறித்து விமானத்தில் சென்றவர்கள் கூறுகையில், “விமானத்தில் செல்ல வேண்டும் என்பது 10 ஆண்டு ஆசை. எங்கள் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ராணுவத்தில் பணிபுரிகின்றனர், அவர்களே அவ்வப்போது விமானத்தில் வந்து செல்வதை எங்களிடம் கூறுவார்கள். எனவே எங்களுக்கு விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதற்காகக் கடந்த 10 ஆண்டுகளாக சிறுகச் சிறுக பணத்தைச் சேமித்து வைத்தோம். இந்த பணத்தில் தற்போது விமானத்தில் சென்று வந்து விட்டோம். இதுவரை ஆகாயத்தில் மட்டுமே விமானத்தைப் பார்த்த நாங்கள் முதல்முறையாக அந்த விமானத்தில் ஏறி பயணித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்று தெரிவித்தனர்.
சந்திரன் மற்றும் சூரியனுக்கு விண்கலத்தை அனுப்பும் அளவுக்குத் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த இந்த காலத்தில், விமானத்தில் செல்வது என்பது பெரிய செயலாக இல்லை என்றாலும், தாட்டான்பட்டி போன்ற குக்கிராமத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இப்போதும் விமானத்தில் செல்வது என்பது பெரும் கனவாக இருப்பதை தாட்டான்பட்டி கிராம மக்களின் கதை நமக்கு உணர்த்துகிறது. மேலும், அனைவரும் நெகிழ்ச்சி அடையும் அளவுக்கு பத்து ஆண்டு ஆசையை நிறைவேற்ற ஊர் மக்கள் எடுத்த விடாமுயற்சி அனைவரிடமும் பாராட்டையும் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தேனியில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை