தூத்துக்குடி: தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த மகாராஜா மற்றும் தேன் தேனிலா ஆகியோரின் இரண்டு விசைப்படகுகளில் தலா 22 மீனவர்கள் கடந்த ஜூலை 20ஆம் தேதி ஒரு படகிலும், 23ஆம் தேதி ஒரு படகிலும் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை விசாரணைக்கு என இலங்கை கடற்படையினர் அழைத்து, பின்னர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மன்னார் தெற்கு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 6ஆம் தேதி இலங்கை புத்தளம் மாவட்டத்தில் உள்ள கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் மீனவர்களை ஆஜர்படுத்தி நீதிபதி இவோனா விமலரத்னா தலைமையில் 22 பேரையும் இன்று (ஆகஸ்ட் 20) வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து, மீனவர்கள் 22 பேரும் வாரியாபொல சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து, தருவைகுளம் கிராம மக்கள் மற்றும் கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், எம்.பி கனிமொழி மற்றும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மீனவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு மனுக்களை அளித்தனர்.
இந்நிலையில், 22 மீனவர்களின் வழக்கு இன்று புத்தளம் நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி விமனே விமலரத்னா மீனவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதனையடுத்து, மீனவர்கள் அனைவரும் வாரியபொல சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர். இதனால் தூத்துக்குடி தருவைகுளம் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கடற்கரை மணலில் சிக்கிய டூரிஸ்ட் பஸ்ஸை 20 மணிநேரம் போராடி மீட்ட திருச்செந்தூர் மீனவர்கள்!