மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவ கிராமங்கள் உள்ளது. இதில் மாவட்ட தலைமை கிராமமாக இருப்பது தரங்கம்பாடி. இந்த தரங்கம்பாடி மீனவ கிராமத்தின் தலைமையில் 19 மீனவ கிராமங்கள் ஒன்று சேர்ந்து சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர். இதற்கு எதிர்புறமாக பூம்புகார் மீனவ கிராமத்தின் தலைமையில் சுருக்குமடி வலைக்கு ஆதரவு தரும் வகையில் பல்வேறு செயல்பாடுகளில் இறங்கியுள்ளனர்.
ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் மீன் பிடிப்பதற்கு சுருக்குமடி, இரட்டை மடி வலைகள் மற்றும் அதிவேக குதிரை திறன் கொண்ட எஞ்சின் பொருத்திய விசைப்படகுகளை பயன்படுத்தக்கூடாது என தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி பூம்புகார் போன்ற கிராமங்களில் மீன்பிடிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பூம்புகார் மற்றும் தரங்கம்பாடி தரப்புகளில் இருக்கும் மீனவ கிராமங்கள் அனைத்தும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இதில் உடன்பாடு ஏட்டப்படவில்லை.
இந்நிலையில், இன்று தரங்கம்பாடி தலைமை பஞ்சாயத்தில் இருக்கும் குட்டியாண்டியூர், வானகிரி, பழையார், கொடியம்பாளையம், கீழமூவர்கரை, சின்னூர்பேட்டை, மாணிக்கப்பங்கு உள்பட 19 கிராமங்களில் இருக்கும் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்தனர்.
அந்த வகையில், கடைகளை அடைத்தும், தொழில் மறியல் செய்தும், தரங்கம்பாடி கடை வீதியில் பெருந்திரளாக குவிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உரையாற்றினர். இதில் சுருக்குமடி, இரட்டைமடி மற்றும் அதிவேக குதிரை திறன் கொண்ட எஞ்சின் பொருத்திய விசைப்படகுகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டும், சில மீனவ கிராமங்கள் மீன் பிடிக்கும் செயலை முற்றிலும் அரசு தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் அங்கமாக, மீனவர்கள் 200 விசைப்படகுகள் மற்றும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்ட அறிவிப்பு குறித்தும், இதனால் ஏற்படும் விளைவுகளை தடுத்து நிறுத்துவதற்காக மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட போலீசார் காவல் பணியில் ஈடுப்படுத்தபட்டுள்ளனர்.
மேலும், இந்தப் போராட்டம் குறித்து தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார் பிச்சை என்பவர் கூறுகையில், “சுருக்குமடி, இரட்டைமடி வலைகள் மற்றும் அதிவேக குதிரை திறன் கொண்ட எஞ்சின் பொருத்திய விசைப்படகுகள், பதிவு செய்யபடாத விசைப்படகுகளால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து பல முறை ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுத்தாக்கல் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பல நாட்களாக நாங்கள் அனுபவித்து வரும் மனவேதனையின் வெளிப்பாடுதான் இந்த சாலை மறியல் போராட்டம். இன்று ஆட்சியர், மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் எங்களிடம் 10 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளனர். அதை கருத்தில் கொண்டுதான் இப்போது போராட்டத்தை கைவிடுகிறோம். ஆனால், 10 நாட்களில் இந்த சுருக்குமடி, இரட்டைமடி வலைகளை நிரந்தரமாக தடுக்கப்படவில்லை என்றால் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டிக்கெட் விலையைக் குறைக்க வேண்டும்" - நடிகர் ராமராஜன் கோரிக்கை