தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நேற்று (ஆகஸ்ட் 6) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தஞ்சை, கரந்தை பகுதியை சேர்ந்த மக்களுக்கு சாலை வசதி வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பள்ளி குழந்தைகள் ஒன்றிணைந்து மனு அளித்தனர்.
அதை கண்ட மாவட்ட ஆட்சியர் பிரியா பங்கஜம், பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகளை அழைத்து வந்தது யார் என கேள்வி எழுப்பினார். மேலும் படிக்கும் குழந்தைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வரும்படி பள்ளியில் இருந்து சீருடையுடன் அழைத்து வந்திருப்பது தவறாகும். இதுபோன்று இனி நடந்தால் குழந்தைகளை அழைத்து வந்தவர்கள் மீது வழக்கு பதிவுச் செய்யப்படும். மக்களாகி நீங்கள் உங்களின் குறைகளை எப்போது வேண்டுமானாலும் ஆட்சியரிடம் தெரிவிக்கலாம். ஆனால் அவை உங்களின் நன்மைகாக இருக்கும் நோக்கத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். வழக்கு பாயும் அளவிற்கு அதை எடுத்து செல்ல தேவையில்லை” என்றார்.
அதேபோல் தஞ்சை அடுத்த வடுகன்பட்டி கிராமத்தை சேர்ந்த சிலர் பள்ளி மாணவ மாணவிகளுடன் பஸ் வசதி வேண்டி மனு அளிக்க வந்தனர். இதை பார்த்த ஆட்சியர் மேலும் கோபமடைந்து, முதலில் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு குழந்தைகளை இங்கு அழைத்து வந்திருப்பது தவறான போக்கு, குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டியது பெற்றோர் பொறுப்பு.
எனவே முதலில் குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு வாருங்கள், உங்களது கோரிக்கைகளை நான் கேட்டறிந்து நிச்சயமாக நடவடிக்கை எடுக்கிறேன். இதனால் ஒரு நாள் படிப்பு வீணாகிவிட்டது, இது தேவையா, யார் உங்களை இது போன்ற மனு கொடுக்க அழைத்தாலும், பள்ளியை விட்டு வரக்கூடாது, உங்கள் வேலை படிப்பது தான், மதிப்பெண் மட்டுமே குறிக்கோளாக இருக்க வேண்டும், நீங்கள் கலெக்டராக வேண்டுமா, போலீசாக வேண்டுமா, அரசு அதிகாரிகளாக வேண்டுமா என்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும் இதுபோன்றவற்றிருக்கு நீங்கள் பள்ளியை விட்டு வரக்கூடாது” என பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கடைசி கதவணையை வந்தடைந்தது காவிரி; மலர்தூவி வணங்கி வரவேற்ற மக்கள்!