சென்னை: சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே மத்திய அரசை வலியுறுத்தி தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. மேலும், தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச் சங்கத்தின் நிறுவனத்தலைவர் சகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
இவர்கள் மட்டும் அல்லாது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்லப் பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக அரசியல் ஆய்வு மைய செயலாளர் அந்தரிதாஸ் உள்ளிட்டோர் இந்த போராட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநிலத் தலைவர் வெள்ளைச்சாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, "கட்டண சேனல்கள் அதிகபட்சமாக 19 ரூபாயாக தங்களது சேனல் விலையை நிர்ணயித்ததை குறைத்து ரூ.5ஆக மாற்றி அமைக்க வேண்டும்; கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு விதிக்கப்படும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்; கட்டண சேனல்கள் ஆண்டுதோறும் தங்கள் சேனல்களுக்கான விலையை ஏற்றிக் கொள்ளலாம் என்கிற அனுமதியை உடனடியாக ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
இதையும் படிங்க: செவிலியர் அல்லாதோரை பணியில் அமர்த்தலாமா? - எம்ஆர்பி செவிலியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு!
இது தவிர, தமிழக அரசுக்கு கோரிக்கையாக சிறு குறு தொழிலாக உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர் தொழிலுக்கு குறைந்தபட்ச ஆவணங்களை ஏற்றுக்கொண்டு மின்கட்டணத்தில் மானியம் வழங்க வேண்டும்; தமிழ்நாடு அரசு தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்து பதிக்கப்பட்டுள்ள டான்பினெட் கேபிள்களை பராமரிக்கவும், அதன் வழியாக குறைந்த கட்டணத்தில் கேபிள் சேனல்களை எடுத்து செல்லவும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும்.
மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்கவும் அடுத்த வாரத்தில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரையும் துறை அதிகாரிகளையும் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.
கோரிக்கை மனு அளித்த பின்னர், மத்திய அரசு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் ஒரு மணி நேரம் கேபிள் டிவி செயலாக்கத்தை நிறுத்தி எங்களது எதிர்ப்பை தெரிவிக்க திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/23-10-2024/22744136_etvwc.jpg)
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்