சென்னை: தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அதே நேரத்தில் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இந்நிலையில் இன்று (மார்.25) முதலில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த தமிழச்சி தங்கபாண்டியன், வெளியில் நின்று கொண்டிருந்த தமிழிசையை சந்தித்து கட்டியணைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்த சம்பவம் கட்சியினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தமிழகத்தில் தற்போது தேர்தல் களம் சற்று சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். குறிப்பாகத் தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள், இன்று தீவிரமாக தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். கடந்த மார்.20ம் தேதி தொடங்கிய இந்த வேட்பு மனு தாக்கல் மார்.27ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், தி.மு.க சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன், இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு வந்திருந்தார். அதே நேரத்தில் பா.ஜ.க சார்பாகப் போட்டியிடும் தமிழிசை செளந்தரராஜனும் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய அங்கு வந்திருந்தார்.
அப்போது, தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு, வெளியே வந்த போது தமிழிசையை நேரெதிரே சந்தித்தார். இந்நிலையில் ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக்கொள்ளும் வகையில், கட்டி அனைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
தமிழக அரசியல் களத்தில் இரு வேறு கட்சி வேட்பாளர்கள் என்றாலும், போட்டி பொறாமையின்றி இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட நிகழ்வு, இரு கட்சியினரிடையே நெகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்தியிருந்தது.