மதுரை: மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தமிழக முதலமைச்சர் அமெரிக்க சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். அந்தவகையில், ரூ.7,616 கோடி மதிப்பில் 11,516 பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் வகையிலான 19 ஒப்பந்தங்களை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற நற்செய்தியை தமிழக முதலமைச்சர் தந்திருக்கிறார். ஏற்கனவே சென்னையிலிருந்த ஃபோர்டு கார் நிறுவன தொழிற்சாலை மீண்டும் சென்னையில் இயங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்" என்று தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக பேசிய அவர், "இலங்கை இந்திய வங்கக் கடல் பகுதியில் தொடர்ந்து தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையும், இலங்கை கடல் கொள்ளையர்களும் தாக்குதல் நடத்துகிறார்கள் இது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மட்டும் அல்லாது இந்திய வருமானத்தையும், இந்திய மீன் ஏற்றுமதியையும் பாதிக்கிறது. இதனை இந்திய பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக பார்க்க வேண்டும். தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவது அவர்களுடைய பிரச்சினை மட்டுமல்ல, இந்திய பொருளாதாரத்திற்கும் தாக்குதல் தான்.
சமீபத்தில், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அங்குள்ள நீதிமன்றத்தில் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் அவர்களை மொட்டை அடித்து அவமானப்படுத்தி திருப்பி அனுப்பி உள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல் இதனை கண்டிக்கும் விதமாக டெல்லியில் இருக்கும் இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: "36 லட்சத்தில் 20 லட்சம் பேருக்கு மத்திய அரசு கடன் வழங்கியதா?”- நிர்மலா சீதாராமனுக்கு செல்வப்பெருந்தகை கேள்வி!
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வரக்கூடிய அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் அதன் தாக்கத்தை வெளிப்படுத்தினார் இது அவருடைய உணர்வு மட்டும் அல்ல மக்களின் உணர்வும் அதுவாகத்தான் உள்ளது. ஆனால், கேள்வி கேட்ட தொழிலதிபரை வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்து, அவரை மத்திய நிதி அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும் அவமானப்படுத்தியுள்ளனர்.
இருசக்கர வாகனத்திற்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி. பெரும் பணக்காரர்கள் பயன்படுத்தக்கூடிய ஹெலிகாப்டருக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி இப்படிப்பட்ட கேலிக்கூத்தான ஜிஎஸ்டி உலகில் எந்த நாடும் போடவில்லை. கடலை மிட்டாய்க்கு ஜிஎஸ்டி வரி அதிகம் வெளிநாட்டு பர்கருக்கு ஜிஎஸ்டி குறைவு இதுதான் ஜிஎஸ்டி-யின் நிலை" என்று விமர்சித்தார்.
இதனை அடுத்து முதலமைச்சரின் வெளிநாடு சுற்றுப் பயணம் தோல்வி என அதிமுக விமர்சித்துள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் வெளிநாடுக்கு செல்வதால் அந்த மாநிலத்தின் வர்த்தகம் மற்றும் வாணிபம் உயர்கிறது என்றால் அதனை யார் செய்தாலும் வரவேற்க வேண்டும்.
மேலும், இந்த ஆட்சியில் ஏற்கனவே பல நாடுகளுக்கு சென்று முதலீடு ஈர்த்துள்ளனர். தற்போது தமிழக முதல்வர் இன்ப சுற்றுலா ஒன்றும் சொல்லவில்லை. தமிழ்நாட்டின் வளம் மற்றும் நலன் காக்க அமெரிக்காவிற்கு சென்று வந்துள்ளார்.
இப்படி இருக்கும்போது, முதலமைச்சர் சுற்றுப் பயணம் சென்று வந்ததுமே, வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று கேட்பது வேடிக்கையாக உள்ளது. ஒருவருடம் பாருங்கள் அதற்கு பிறகும் எந்த திடமும் நடக்கவில்லை என்றால் கேள்வி கேளுங்கள் அது நியமாக இருக்கும்.
அதனைவிடுத்து சுற்றுப் பயணம் முடித்து வந்த 24 மணிநேரத்திலேயே அந்த சுற்றுப் பயணமே தோல்வி, ஏமாற்றம் என்று சித்தரிப்பது நல்ல அரசியல் அல்ல. எதிர்க்கட்சிகள், எதிர்க்கட்சிகளாக இருக்க வேண்டும் எதிரி கட்சியாக இருக்கக் கூடாது" என தெரிவித்தார்.