மதுரை: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உழவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பு தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவரும், பொறியாளருமான திருநாவுக்கரசு வந்திருந்தார்.
மழைநீர் சேகரிப்பு, பாசனம், வெள்ளம் மற்றும் வறட்சி தடுப்பு குறித்து தனது பொறியாளர் நண்பர்களோடு ஆய்வு மேற்கொண்டு, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.
இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் மற்றும் மழைநீரால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து எளிய தீர்வாக அவர் முன் வைத்த ஆய்வின் அடிப்படையில் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி ஒன்றை வழங்கினார்.
அபாயகரமான நிலைமை: அப்போது பேசிய அவர், “தற்போது தமிழ்நாட்டில் ஓராண்டுக்கு 472 டிஎம்சி தண்ணீர் நிலத்தடியிலிருந்து எடுக்கப்படுகிறது. இது ஒரு மிக அபாயகரமான நிலைமையாகும். நிலத்தடி நீர் உறிஞ்சப்படுமானால், அது மிக மோசமான சூழல் விளைவுகளை மட்டுமன்றி, பூமியையும் பாதிக்கும்.
இதனைச் சமாளிக்க ஒரு அடி விட்டமுள்ள குழாய்களை ஆழ்துளைக் கிணறு அமைப்பது போன்று, நிலத்தடி நீர் மட்ட அளவிற்கு பூமிக்குள் உட்செலுத்தி, தண்ணீர் உட்புகும் இடத்தில் வடிகட்டி அமைத்துவிட்டால் போதும். தோராயமாக 240 குழாய்களில் ஒரே நாளில் மட்டும் 1 டிஎம்சி தண்ணீர் பூமிக்குள் செல்லும்.
இதுபோன்ற அமைப்பினை காவிரி, கொள்ளிடம் மட்டுமன்றி, கண்மாய், ஏரிகள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தினால் 2 மாத மழைக் காலங்களில் அதிக டிஎம்சி தண்ணீரை உட்செலுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தை நிச்சயமாக உயர்த்த முடியும்.
மின்சார செலவு மிச்சம்: நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது என்பது மிக அவசியமான ஒன்று. ஏனெனில், 500 அடியில் உள்ள தண்ணீரை ஆழ்துளை போர்வெல் மூலமாகக் கொண்டு வர அதிக மின்சாரம் செலவாகிறது. இந்நிலையை மாற்ற நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, 100 அடிக்குள் தண்ணீரின் மட்டத்தை உயர்த்தினால், மின்சாரத்தின் பயன்பாடு 20 சதவிகிதம் மட்டுமே செலவாகும். நிலத்தடி நீர்மட்டம் கீழே செல்லச் செல்ல மின்சாரத்தின் தேவையும் அதிகரிக்கும். மேலும் சுற்றுச்சூழலும் மோசமடையும்.
வறட்சிப் பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம்: குடிநீர்த் தேவைக்காக அதிக தூரமுள்ள இடங்களுக்கு, குறிப்பாக கல்லணையிலிருந்து - ராமநாதபுரம் வரை பம்ப் செய்து விநியோகிக்கப்படுகிறது. கிடைமட்டமாக பம்ப் செய்யும்போது அதிக மின்சாரம் தேவைப்படாது.
பெரிய அளவில் வெள்ளம் வரும்போது, குறிப்பாக மழைக்காலங்களில், காவிரி நீரைத் திறந்து விடுகின்ற காலங்களில் தண்ணீரை, நாங்கள் கூறியவாறு பம்ப் செய்து விநியோகம் செய்ய அரசு திட்டமிட வேண்டும். காவிரி ஆற்றிலிருந்து தெற்கு நோக்கிச் சென்றால் கடல் மட்ட அளவு 40-50 அடி தான் வித்தியாசம் உள்ளன.
ஆகையால், வீணாகும் தண்ணீரை வறண்ட பகுதிகளுக்கு, குறிப்பாக அரியலூர், பெரம்பலூர் பகுதிகளுக்கு பம்ப் முறையின் மூலம் விநியோகம் செய்யலாம். இதற்காக முழுமையான ஆய்வினை நாங்கள் மேற்கொள்ளவில்லை. ஆனால், இதனைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
இதையும் படிங்க: பாரம்பரிய பொருட்களில் கிஃப்ட்.. மதி அங்காடியின் அசத்தல் பேக்கேஜ்!
தமிழக அரசுக்கு அறிக்கை: தஞ்சையைச் சேர்ந்த பொறியாளர்கள் ஐந்து பேர் கொண்ட குழு இதுகுறித்து விரிவான அறிக்கையை தயாரித்து, நூலாக்கம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடந்த 2022ஆம் ஆண்டு வழங்கினோம். ஆனால், அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் இதுவரை வரவில்லை.
நீர்மட்டத்தை உயர்த்தும் வழி: நாங்கள் அளித்துள்ள திட்டத்தின் அடிப்படையில், நிலத்தடி நீர்மட்டம் உயரும் சாத்தியப்பாடு நிச்சயம் உண்டு. இதனை சோதனை அடிப்படையில் நாங்கள் நிரூபித்தும் காட்டியுள்ளோம், ஆனால் செலவாகும். ஒரு குழாய் அமைக்க ரூ.1 லட்சத்திலிருந்து ஒன்றரை லட்சம் வரை செலவாகலாம்.
ஆனால், ஒரு தடவை செலவு செய்தால் போதுமானது. பிறகு ஆண்டு முழுவதும் தண்ணீரை நிலத்தடியில் சேகரிக்க முடியும். முன்னரே இதற்கான கட்டமைப்பை உருவாக்கி வைத்தால்தான், மழை வெள்ளக் காலங்களில் நிலத்தடி நீரைச் சேமிக்க இயலும்.
4,400 டிஎம்சி மழை நீர் : தமிழ்நாட்டில் 4,400 டிஎம்சி மழை பெய்கிறது. இதில் பாதிகூட நம்மால் பயன்படுத்த இயலவில்லை என்பதுதான் உண்மை. ஆகையால் தமிழக அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். இப்போது காட்டு விலங்குகளெல்லாம் அத்துமீறி குடியிருப்புப் பகுதிகளுக்க வருகிறது என்றால், காடுகள் வறண்டதே காரணம்.
காடுகளின் வறட்சிக்குக் காரணம், அங்கே மழைநீர் சேகரிப்பிற்கான கட்டமைப்புகள் இல்லாததே. ஓடுகின்ற தண்ணீரை ஆங்காங்கே கரைகளோ, தடுப்பணைகளோ, குளங்களோ அமைத்து சேமிக்க வேண்டும். அப்போதுதான் காடுகள் வளம் பெறும். கானுயிர்கள் அத்துமீறுவதும் குறையும்.
ராஜேந்திர சிங் முன்னுதாரணம் : இதற்கு முன்னுதாரணம் யார் என்று பார்த்தால், மழைநீரைத் தேக்கி நிலத்தடி நீரைப் பெருக்கும் வழிமுறையைச் சொன்னவர் நீரியல் அறிஞர் ராஜேந்திர சிங். குறிப்பாக, நாங்கள் முன்வைக்கும் திட்டத்தை சாத்தியமான இடங்களில் தமிழக அரசு சோதனை அடிப்படையில் செய்து பார்க்கலாம்.
அணைக்கரை, முக்கொம்பு போன்ற இடங்களில் எப்போதும் தண்ணீர் தேங்குகிறது. அங்கெல்லாம் இதுபோன்ற ஆழ்துளைக் குழாய்கள் அமைத்துப் பார்க்கலாம். இதுபோன்ற முயற்சிகளின் வாயிலாக நிலத்தடி நீரை உறுதியாக மேம்படுத்த முடியும் என்பதை எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்