தென்காசி: பள்ளிப்படிப்பை கூட தாண்டாத ஒருவரால் இன்று பல நூறு மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். தன்னுடைய வீட்டையே ஒரு குட்டி நூலகமாக மாற்றியுள்ள இளைஞர் குறித்து விரிவாகப் பார்ப்போம். தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் திருமலை குமார்.
நெசவாளர் குடும்பத்தில் இவர், 10 வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. இருப்பினும் முன்னாள் ஐஎஏஸ் அதிகாரியான இறையன்புவின் உரைகளை உன்னிப்பாக கவனித்து வந்திருக்கிறார். பின்னர் அவரின் பேச்சால் ஈர்க்கப்பட்ட திருமலை குமார் இறையன்பு கூறிய புத்தகங்கள் முதலில் படிக்க ஆரம்பித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து புத்தகத்தின் மீது ஏற்பட்ட அதீத ஆர்வத்தால் பல்வேறு புத்தகங்களை வாங்கியுள்ளார். இதனையறிந்த அப்பகுதி சேர்ந்தவர்கள், அவரது நண்பர்கள் உள்ளிட்டோர் திருமலை வீட்டிற்கு வந்தும், புத்தங்களை வாங்கி சென்றும் படித்து வந்துள்ளார்.
ஒரு கட்டதில் நாம் ஏன் ஒரு மினி நூலகம் போன்ற அமைக்கக் கூடாது என எண்ணியுள்ளார் திருமலை. இருப்பினும் அவரிடம் போதிய வசதி இல்லாத காரணத்தால் அதைச் செயல்படுத்த முடியால் போனது.
நிறைவேறிய கனவு: மொட்டை மாடியில் குடிசை அமைத்து புத்தகங்களை பாதுகாத்து நண்பர்களுக்கு பயனுள்ளதாக மாற்றி வந்த திருமலைகுமாருக்கு, படிப்பகத்திற்கு வந்து செல்லும் தோழியின் நட்பு கிடைத்திருக்கிறது. அவரிடம் நூலகம் அமைப்பதற்காகக் கடனாக ஒரு லட்ச ரூபாய் பெற்று, பல நூறு புத்தகங்களை வாங்கி தன்னுடைய வீட்டில் குவித்துள்ளார். இதில் போட்டி தேர்வு புத்தகங்களும் அடங்கும்.
தற்போது பள்ளி மாணவர்கள் முதல் போட்டி தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் என பலருக்கும் இங்கு வந்து தங்களுக்கு தேவையானவற்றை படித்து பயன்பெற்றுச் செல்கின்றனர். மேலும் இங்கு படித்தவர்கள் தற்போது காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு படை மற்றும் அரசு அதிகாரிகளாகவும் வேலையில் உள்ளனர் என்பது ஆச்சரியமான விஷயமாகும்.
இவரிடம் புத்தகங்களை எடுத்துச் சென்றவர்கள் திரும்ப வரவில்லை என்ன செய்வீர்கள் என நமது செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அவர் சொன்ன பதில் நமக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. "புத்தகத்தை எடுத்துச் சென்று திரும்ப வரவில்லை என்றால் என்ன. அவர்கள் அறிவை வளர்க்கத்தானே எடுத்துச் செல்கிறார்கள். புத்தகம் எங்குச் சென்றாலும் அறிவு பெருகுமே தவிர என்றும் குறையாது" என யதார்த்தமாகப் பதில் அளித்தார்.
நிறைய செய்ய வேண்டும்: இது குறித்து நமக்கு அளித்த பேட்டியில்,"கடந்த 11 ஆண்டுகளாக அறிஞர் அண்ணா அறிவுக்கூடம் என்ற பெயரில் நூலகம் நடத்தி வருகிறோம். எனது படிப்பிற்கு தூண்டுதலாக இருந்த இறையன்பு ஐஏஎஸ்க்கு நன்றி. மாற்றம் என்பது சொல் அல்ல செயல் என்று கூறுவார்கள் அதற்கு தகுந்தார் போல் நடந்து கொண்டு இருக்கிறோம்.
இந்த நூலகத்திற்கு உருவாக்குவதற்கு வட்டியில்லாமல் கடன் கொடுத்த என்னுடைய நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த நூலகத்தில் படித்த பலர் ரானுவம்,வருவாய், காவல், கிராம நிராவக அலுவலர் உள்ளிட்ட தேர்வுகளை எழுதி, அதில் சிலர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நான் இதே போல் நிறைய செய்ய வேண்டும் என நினைக்கிறேன்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெள்ளி வென்ற அடுத்த கணமே வந்த கால்.. கால்நடை மருத்துவரின் பாராலிம்பிக்ஸ் கனவு சாத்தியமானது எப்படி?