தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அதேநேரம், சீசன் காலங்களில் வரும் வெளியூர்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளைக் கணக்கில் வைத்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல், அவர்கள் ஆன்லைன் மூலம் உணவும் ஆர்டர் செய்கின்றனர்.
இந்த நிலையில், குற்றாலத்திற்கு வெளியூர்களில் இருந்து வரும் இளைஞர்களைக் குறி வைத்து உல்லாசமாக இருப்பதற்கு பெண்கள் இருப்பதாகவும், ஆன்லைன் மூலம் அவர்களை அட்வான்ஸ் கொடுத்து புக் செய்து கொள்ளலாம் என்றும் மோசடி நடைபெற்றுள்ளது. இதில் சிக்கி பணத்தை இழந்த பலரும் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளனர். ஆனால், இதில் ஏமாற்றம் அடைந்து பணத்தைப் பறிகொடுத்த இளைஞர் ஒருவர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பின்னர், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இதனை ஆன்லைன் மூலம் இயக்கியவர் பொள்ளாச்சியில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, பொள்ளாச்சிக்கு வரைந்த தென்காசி சைபர் கிரைம் போலீசார், பிரபாகரன் என்ற இளைஞரை கைது செய்து தென்காசிக்கு அழைத்து வந்தனர்.
அப்போது அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில், குறிப்பிட்ட இணையதளம் மூலம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.