தென்காசி: தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள திருமலாபுரம் கிராமத்தில் குலசேகரபேரி கண்மாய்க்கு அருகே தொல்லியல் மேடு அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், திருமலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சாலை பணிக்காக மண் எடுக்கும்போது ஏறக்குறைய நான்கு அடி ஆழத்தில் தொல்லியல் எச்சங்கள் தெரியவந்துள்ளது.
இந்த தொல்லியல் மேடானது சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நிலையில், அப்பகுதியில் முதுமக்கள் தாழிகள், வெண்மை நிறத்திலால் ஆன அலங்கரிக்கப்பட்ட மண் கிண்ணங்கள், செம்பிலான கிண்ணம், இரும்பிலான ஈட்டி, வாள், குருவாள் போன்ற முக்கிய தொல்பொருட்களும் கிடைக்கப்பட்டுள்ளன.
தற்போது அப்பகுதியில் தொல்லியல் அகழாய்வு பணியினை மேற்கொள்ளும் வகையில், மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீ குமார் ஆகியோர் அகழாய்வு பணிகளைத் துவக்கி வைத்தனர். இந்த அகழாய்வு பணிகள் திருமலாபுரம் அகழாய்வு இயக்குநர் வசந்தகுமார் மற்றும் அகழாய்வு பொறுப்பாளர் காளீஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுதொடர்பாக பல்கலையில் படித்துவரும் மாணவ, மாணவிகளும் இந்த பகுதியில் அகழ்வாய்வு ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவித்தனர். மேலும் அகழ்வாய்வு ஆராய்ச்சியில் கிடைத்த பொருட்களை அனைவருக்கும் முன்பாக வைக்கப்பட்டது. அதைப் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், அரசுத்துறை அதிகாரிகள் என அனைவரும் பார்வையிட்டுச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், "கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் துவக்கி வைத்துள்ளார். அந்த வகையில், திருமலாபுரம் அருகே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இடம் கண்டறியப்பட்டுள்ளது. இவ்விடத்தில் முதுமக்கள் தாழி, கருப்பு சிவப்பு மண்பானைகள், வாள் உள்ளிட்டவை கண்டுபிடித்து வைத்துள்ளனர்.
தற்போது இந்த இடத்தில் கிடைத்துள்ள பொருட்களை வைத்துப்பார்த்தால், இப்பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்திருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர். இவற்றை ஆராய்ந்த பிறகே, எந்த மாதிரியான மக்கள் இங்கு வசித்தனர், என்ன வேலை செய்தார்கள் என்பது குறித்துத் தெரியவரும்" என கமல் கிஷோர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 41 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! யார் இந்த KNR குரூப்?