சென்னை: சென்னையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அறிவித்திருந்த கோட்டை முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் (டிட்டோ-ஜாக்), செப்டம்பர் 30ஆம் தேதி மற்றும் அக்டோபர் ஒன்றாம் தேதிகளில் சென்னை கோட்டை முற்றுகைப் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் டிட்டோ-ஜாக் நிர்வாகிகள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை இன்று (செப்டம்பர் 20) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் டிட்டோ ஜாக் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது கூட்டமைப்பின் உயர் மட்ட குழு உறுப்பினர் காமராஜ் பேசுகையில், "31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் ஒன்றாம் தேதிகளில், சென்னை கோட்டை முற்றுகைப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தோம். இந்த சூழலில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். பணி சார்ந்த கோரிக்கைகள், நிதி சார்ந்த கோரிக்கைகள் என இரண்டாக பிரித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் மதுவிலக்கு உள்ளதா? - விசிக திருமாவளவன் கேள்வி
விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் செப்டம்பர் 27ஆம் தேதி பிரதமரை சந்திக்க உள்ளார். பிரதமர் தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும். ஒன்றிய அரசிடமிருந்து நிதியைப் பெற்று எங்களுக்கு நிதி சம்பந்தமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளார்.
பள்ளிக்கல்வி அமைச்சர் பேச்சுவார்தை திருப்திகரமாக இருந்ததால், போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. அரசாணை 243-ஆல் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றக்கூடிய 90 விழுக்காடு ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசு ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை களைவதற்காக அமைக்கப்பட்ட குழு, மீதமுள்ள சங்கங்களையும் அழைத்து ஒரு மாதத்தில் கருத்து கேட்டு அறிக்கை தாக்கல் செய்வதாக தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் நலனை கருத்திற்கொண்டு, பள்ளிக்கல்வித்துறைக்கு உரிய நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்," எனத் தெரிவித்தார்.