ஈரோடு : ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த மாக்கம்பாளையம் வனக்கிராமத்தில் சுமார் 3500 பேர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்துக்கு செல்ல வேண்டுமெனில் வனப்பகுதியில் ஓடும் குரும்பூர் பள்ளம், சார்க்கரைப்பள்ளம் ஆகியவற்றை கடந்து செல்ல வேண்டும்.
கடம்பூரில் இருந்து 23 கி.மீ தூரத்தில் உள்ள மாக்கம்பாளையத்துக்கு தினந்தோறும் இரு முறை அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. குரும்பூர், சர்க்கரைப்பள்ளத்தில் காட்டாற்று வெள்ளத்தை கடந்து பேருந்து செல்ல வேண்டி நிலையில், மழைக் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசுப் பேருந்து ரத்து செய்யப்படுகிறது.
இது குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டத்தையடுத்து 2021ம் ஆண்டு இரு பள்ளங்களில் ரூ. 9 கோடி செலவில் உயர்மட்ட பாலக்கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பின் கட்டுமான பணிகள் நிறைவுற்றன.
இரண்டாது பாலமான சர்க்கரைப்பள்ளம் பாலத்தில் 80 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதற்கிடையே, நேற்றிரவு காலை வரை கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சர்க்கரைப்பள்ளத்தில் திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க : திருப்பதி லட்டு விவகாரத்தில் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு நோட்டீஸ்; மத்திய அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!
இருப்பினும் அன்றாட தேவைக்கு வெளியே செல்ல வேண்டிய நிலையில் ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை இரு சக்கர வாகன ஓட்டிகள் கடந்து சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த டெம்போ, காட்டாற்று வெள்ளத்தைக் கடக்கும்போது நீரில் சிக்கி பழுதானது. நீரின் வேகம் காரணமாக டெம்போவை தள்ளமுடியாமல் 2 மணி நேரம் காத்திருந்தனர்.
பின்னர் பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி டெம்போவை இழுந்து வந்தனர். காட்டாற்று வெள்ளம் காரணமாக கடம்பூரில் இருந்து வரும் அரசுப் பேருந்து ரத்து செய்யப்பட்டதால் மாக்கம்பாளையம் பள்ளி மாணவர்கள் கடம்பூர் பள்ளிக்கு வர முடியாமல் சிரமமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதனால் சர்க்கரைப் பள்ளத்தின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தின் பணிகளை விரைந்து முடித்து உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என மாக்கம்பாளையம் மக்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்