திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் மகன் பழனி. இவர் திருப்பத்தூர் பகுதியில் கடந்த 10 வருடங்களாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், புதுப்பேட்டை பகுதியில் பழனியின் முப்பாட்டனார் அருள்மிகு திருநாராயண சுவாமி திருக்கோயிலைக் கட்டியுள்ளனர்.
ஆகையால், இந்து சமய அறநிலையத் துறை சார்ந்த அதிகாரிகளிடம் நேரடி வாரிசுக்கான ஆவணங்களை பழனி வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த ஆவணங்கள் மீது பரிசீலனை செய்த அதிகாரிகள், கடந்த 2023 பிப்.13-ஆம் தேதி அன்று பழனியை அந்த கோயிலுக்கு அறங்காவலராக நியமனம் செய்துள்ளனர்.
தற்போது, கோயிலுக்குச் சொந்தமான 10 ஏக்கர் சொத்தையும், திருப்பத்தூர் பகுதியில் கோயிலுக்குச் சம்பந்தப்பட்ட 7 கடைகளையும் கடந்த 1 வருடமாகப் பழனி பராமரித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி ஆட்களை வைத்து மிரட்டுவதாகவும், அறங்காவலர் பதவியிலிருந்து ராஜினாமா கடிதம் வழங்குமாறு வற்புறுத்துவதாகவும் பழனி குற்றம்சாட்டியுள்ளார்.
அதுமட்டுமின்றி, திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பியின் உதவியாளர் வெங்கடேசன் என்பவர், பழனியின் வீட்டிற்கு அடியாட்களுடன் சென்று எம்.எல்.ஏ-வை நேரில் வந்து சந்திக்குமாறு மிரட்டியதாகவும், எம்.எல்.ஏ நல்லதம்பி வேறொரு தொலைப்பேசி எண்ணிலிருந்து அழைத்து பழனியை மிரட்டி, தகாத வார்த்தையில் திட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், பழனி பல ஆண்டுகளாக திமுகவில் இருந்து வந்த நிலையில், எம்.எல்.ஏ-வின் அணுகுமுறை சரியில்லாத காரணத்தால் தான் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் கோயில் அறங்காவலர் பழனி தெரிவித்துள்ளார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பாஜவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, தனக்கும் தன்னுடைய குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பழனி வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, தனக்கும் தன்னுடைய குடும்பத்தாருக்கும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு முழு காரணம் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தான் எனவும் பழனி கூறிய வீடியோ மற்றும் நல்லதம்பி மிரட்டும் ஆடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக புகாருக்கு ஆளாகியுள்ள சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி விளக்கம் அளித்தால் அதனை வெளியிட ஈடிவி பாரத் தயாராக உள்ளது.
இதையும் படிங்க: பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது!