சென்னை: இன்று தென் தமிழகம், வட தமிழக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவான மழை: விருதுநகர் மாவட்டம் கோவிலங்குளத்தில் தலா 4 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. தென்காசி மாவட்டம் கருப்பாநதி அணை, தஞ்சாவூர் மாவட்டம், விருதுநகர், மதுரை மாவட்டம் புலிப்பட்டியில் தலா 3 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம். திருச்சி மாவட்டம் மருங்காபுரி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், மதுரை மாவட்டம் எழுமலைய, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தலா 2 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், மதுரை மாவட்டம் திருமங்கலம், தல்லாகுளம் மற்றும் சிட்டம்பட்டி, தேனி மாவட்டம் பெரியகுளம்,விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி,புதுக்கோட்டை மாவட்டம் மிமிசல், நீலகிரி மாவட்டம் கெத்தை, திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை பகுதிகளில் தலா 1 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. வட தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ், வட தமிழக கடலோரப்பகுதிகள், தென் தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33 டிகிரி முதல் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 19 டிகிரி முதல் 29 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை ஈரோடு மற்றும் சேலத்தில் 39 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 36.5 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று, தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை முதல் ஏப்ரல் 17ம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 18ம் தேதி, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்ரல் 19 மற்றும் 20ம் தேதிகளில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு: இன்று முதல் ஏப்ரல் 18ம் தேதி வரை, அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அநேக இடங்களில் 37 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ், வட தமிழக கடலோர பகுதிகள், தென் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 34 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.
ஏப்ரல் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை,அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அநேக இடங்களில் 38 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.
ஈரப்பதம்: இன்று முதல் 18ம் தேதி வரை, காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோர பகுதிகளில் 50-80 சதவீத ஆக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.