சென்னை: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொது செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "மத்திய அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதி பங்களிப்பை உடனடியாக வழங்கிட வேண்டும். கல்வியில் தமிழகத்தை, தமிழர்களை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டிக்கிறோம்.
மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதி பங்கீட்டினை உரிய முறையில் வழங்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. தமிழ் மீதும், தமிழர்களின் மீதும் மத்திய அரசின் வன்மமும் தமிழர்களின் அரசியல் கலாச்சார தெளிவும் அதற்கு ஒரு காரணம்.
பள்ளிக்கல்வித்துறையில் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ஏறக்குறைய ரூ.573 கோடியினை வழங்காமல் ஏழை குழந்தைகளின் வயிற்றில் அடிக்கும் பணியினை தொடர்ந்து செய்துவருகிறது மத்திய அரசு. இதனால் பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம், கல்வி சார்ந்த பல்வேறு திட்டப் பணிகள், அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய பல்வேறு நிதி சார்ந்த உரிமைகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு வரவேண்டிய கடைசி தவணையான ரூ.249 கோடியும் வழங்கவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் அமெரிக்கா செல்வதற்கு முன்பாக இது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி விரிவான கடிதத்தினை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, தமிழ்நாடு எம்பிக்கள் அனைவரும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு உடனடியாக நிதியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், மத்திய அரசு குழந்தைகளின் கல்வி வளர்ச்சி நலனில் அக்கறை கொள்வதற்கு பதிலாக, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தினால் மட்டுமே மத்திய நிதி பங்களிப்பை வழங்க முடியும் என்று கூறுவது கூட்டாட்சி முறைக்கும், ஜனநாயக நடைமுறைகளுக்கும் முற்றிலும் எதிரானது.
பொதுப் பட்டியலில் கல்வி இருந்த காலம் தொட்டே தமிழகம் கல்வி வளர்ச்சியில் தலை சிறந்து விளங்கி வருகிறது. அகில இந்திய அளவிலான உயர் கல்வி சேர்க்கையினை காட்டிலும் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் பல்வேறு கல்வி நல உதவி திட்டங்களால் தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவிலும் உலக அளவில் தலைசிறந்து விளங்கி வருகின்றனர்.
மேலும், மத்திய அரசு கல்விக்கான நிதி பங்களிப்பை வழங்காமல் கால நீட்டிப்பு செய்வதால், தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் ஊதியம், பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம், கல்வி வளர்ச்சிக்கான பல்வேறு நலத்திட்டங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவை தொய்வு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, மத்திய அரசு தன்னுடைய பாரபட்சமான போக்கை நிறுத்திக் கொண்டு, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை கொடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படு" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பொதுத்தேர்வு மையத்திற்கு தடை.. அரசுத் தேர்வுத்துறை அறிவிப்பு!