சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை (ஏப்.19) வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 6 மணி வரை அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும். அதன்படி, கடைசி வாக்காளர் வரை வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 18, 19 வயதிலான வாக்காளர்கள் 10.92 லட்சம். மொத்தம் 68,321 வாக்குச்சாவடிகளும், 39 வாக்கு எண்ணும் மையங்களும் உள்ள நிலையில், தேர்தல் பணியில் மொத்தம் 3.32 லட்சம் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.
அதேபோல், 190 கம்பெனி துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். 15 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவப் படையினர், தேர்தலுக்குப் பின்னர் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் 874 ஆண் வேட்பாளர்களும், 76 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நேற்று வரை சுமார் 173.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 6.67 கோடி மதிப்பிலான மது வகைகளும், 1.13 போதைப் பொருட்களும், தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் 1083 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டிலில் புதிதாக சேர்க்கப்பட்ட அனைவருக்கும் வாக்காளர் அட்டை அனுப்பட்டுவிட்டது. சுமார் 26.50 லட்சம் வாக்காளர்களுக்கு அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன. வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் மற்ற 12 ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம்.
இந்த தேர்தலில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 568 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 81,157 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 86,858 விவிபாட் இயந்திரங்களும் வைப்பட்டுள்ளன. அதேபோல் விளவங்கோடு தொகுதியில் 325 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 326 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 346 விவிபாட் இயந்திரங்கள் வைப்பட்டுள்ளன.
85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் 1950க்கு தொடர்பு கொண்டு வாகன உதவி கோரலாம். அவர்கள் அழைத்து வரப்பட்டு மீண்டும் பத்திரமாக வீடுகளுக்குக் கொண்டு சென்று இலவசமாக இறக்கிவிடப்படுவர்.
அதேபோல் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோர் வாக்குச்சாவடியில் நீண்ட நேரம் வரிசையில் நிற்காமல் நேரடியாகச் சென்று வாக்குப்பதிவு செய்ய முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், Voter helpline செயலியில் Epic no மூலம் தங்களுடைய பெயர் பட்டியலில் உள்ளதா, எந்த வாக்குச்சாவடியில் பெயர் உள்ளது என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ள முடியும்.
வாக்குச்சாவடிகளுக்குள் அதிகாரிகளைத் தவிர, வாக்காளர்கள் உள்ளிட்ட யாரும் செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை. வாக்குச்சாவடி வளாகத்திலேயே செல்பி பாயின்ட்டுகள் அமைக்கப்படுகின்றன. குடிநீர், சாமியானா போன்றவை முறையாக நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "சேவையே கடவுள்".. மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு ராகவா லாரன்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ்! - Raghava Lawrence