தமிழ்நாடு: தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும், நிர்வாகிகளும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்காகத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தோசை சுடுவது, பூரி சுடுவது, டீக்கடையில் டீ போடுவது போன்று நூதன செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் துரை வைகோ இன்று திருச்சியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, அண்ணா நகர்ப் பகுதியில் உள்ள திருச்சி பேட்மிட்டன் அகாடமியில் பேட் மிட்டன் விளையாடும் மாணவர்கள் மற்றும் வீரர்களுடன் கலந்துரையாடி சிறிது நேரம் விளையாடினார். அப்போது, உடல் ஆரோக்கியம் குறித்தும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்க விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மிக அவசியம் எனக் கூறி விளையாடி வீரர்களிடையே வாக்கு சேகரித்தார்.
இஸ்திரி போட்டு வாக்கு சேகரிப்பு: அதே போல், கோவை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரான சிங்கை ராமசந்திரனை ஆதரித்து புலியகுளம் பகுதியில் வாக்கு சேகரித்த கோவை வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்சுணன். சாலையோர இஸ்திரி கடையில் துணிகளுக்கு இஸ்திரி போட்டு அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுக்கு வாக்கு சேகரித்தார்.
அதனைத் தொடர்ந்து, தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகின்ற வழக்கறிஞர் ஆ.மணி
தருமபுரி பகுதியில் முக்கல்நாய்க்கன்பட்டி, நீலாங்கரை, செட்டிக்கரை, ராஜப்பேட்டை, குரும்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களைச் சந்தித்து வீடு வீடாக நடந்தே சென்று வாக்குகளைச் சேகரித்தார்.
புளி எடுத்தும், மண் பானை செய்து வாக்கு சேகரிப்பு: அப்பொழுது குரும்பட்டி பகுதியில் வீட்டருகே பெண்கள் புளியைச் சுத்தம் செய்யும் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது பெண்களுடன் அமர்ந்த ஆ.மணி புளியைச் சுத்தம் செய்தும், பெண்களிடம் தமிழ்நாடு அரசின் சாதனைகளைச் சொல்லி உதயசூரியனுக்குச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என வாக்கு சேகரித்தார்.
பின்னர், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலின், இன்று கும்பகோணம் அருகேயுள்ள மாத்தி பகுதியில், மண் சட்டி பானைகள் செய்யும் கண்ணன் என்பவரின் வீட்டிற்கு வாக்கு கேட்கச் சென்ற போது, அவருக்கு மண் பானை, சட்டிகள் தயார் செய்து கொடுத்து வாக்கு சேகரித்தார்.
நாற்று நட்டு வாக்கு சேகரிப்பு: அதைப் போல, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமா கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து மாம்பழம் சின்னத்திற்குத் தீவிர வாக்கு சேகரிப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்கு உட்பட்ட ராஜக் கப்பட்டி அருகே வாக்கு சேகரிக்கச் சென்ற போது விவசாய நிலங்களில் பெண் விவசாயிகள் பணி செய்து வந்தனர்.
அப்போது பாமக வேட்பாளர் கவிஞர் திலகபாமா பெண் விவசாயிகளுடன் சேர்ந்து கிராமிய பாடல் பாடி நாற்று நட்டு மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்து அமோக வெற்றி பெற வேண்டும் என வாக்குகள் சேகரித்தார். அதைப் போல, தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலிக்கு வாக்கு கேட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஒரத்தநாடு மற்றும் தஞ்சை கீழவாசல் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்: முன்னதாக அவர் வருவதற்கு முன்பு ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள் பேண்ட் வாத்தியத்திற்குக் குத்தாட்டம் ஆடினர், அதைப்போல் பெண்கள் சிலர் கண்டா வர சொல்லுங்கள் என்ற பாடலுக்குக் குத்தாட்டம் ஆடி அசத்தினர்.மேலும் நவீன ஒளிரும் மின் விளக்குடன் பேட்டரியால் இயங்கக்கூடிய உதயசூரியன் சின்னம் விளம்பரப் பலகையைப் பெண்கள் தங்கள் கைகளில் ஏந்தி பிடித்திருந்தனர்.பின்னர், அமைச்சர் உதயநிதி கருப்பு சிவப்பு வண்ண பலூன்களை பறக்கச் செய்து ஈடுபட்டார்.