சென்னை: போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில், 103 இருக்கைகள், செங்கல், கருங்கல் நடைபாதைகள், கூடைப்பந்து விளையாட்டு மைதானம், சிறுவர் விளையாட்டுத்திடல் ஆகியவற்றுடன், 6.85 ஏக்கர் அளவில் குளம், திறந்தவெளி உடற்பயிற்சி மைதானம், பார்க்கிங், கழிப்பிடம், கடைகள், மின்விளக்கு, சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்டு வரும் இந்த பூங்காவின் பணிகளை அமைச்சர் சேகர்பாபு அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், இதுவரை செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்தும், எப்போது பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், அந்த பூங்காவில் கூடுதலாக மின்விளக்கு வசதி மற்றும் பாதுகாப்பு வசதி குறித்து சில பரிந்துரைகளையும் வழங்கினார். அப்போது அமைச்சர் சேகர்பாபு, அங்கு குளத்தில் மலர்ந்திருந்த பூக்களைப் பார்த்து, குளத்தில் கூட தாமரை மலரக்கூடாது என கிண்டலாக தெரிவித்தார். அமைச்சரின் இந்த பேச்சு பாஜகவை சீண்டியதாக இருந்தது.
இதையும் படிங்க: "எப்படியாவது ஜாமீன் கிடைக்கும் என்ற எண்ணம் கூடாது" - நீதிபதி அறிவுரை!
இந்த நிலையில், பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இதற்கு எதிர்வினையாற்றி ட்வீட் செய்துள்ளார்.
இது சாத்தியம் என்பது சத்தியம்: தமிழிசை சௌந்தரராஜன் தனது பதிவில், '' அரசு அமைக்கும் பூங்காவில்.. குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது.. என ஆவேசப்பட்டு இருக்கிறார் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு... குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே... வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது.. அதைக் கண்டு நீங்கள் அலறத்தான் போகிறீர்கள்... அரசு அமைக்கும் பூங்காவிலேயே தாமரை வேண்டாம் என ஆவேசப்படும் நீங்கள்.. தாமரை அரசமைக்கும் காலத்தையும் பார்க்கத்தான் போகிறீர்கள்.... நீங்கள் காலம் காலமாக கூவத்தை சுத்தம் செய்வோம் என மக்களை ஏமாற்றுவது மாற்றி கூவத்தையும் சுத்தப்படுத்தி அங்கேயும் தாமரை மலர மலர் முகத்துடன் மக்கள் காணத்தான் போகிறார்கள்... இது வெறும் சத்தமல்ல சத்தியம் சாத்தியம்... லட்சியப்ப பற்றுள்ள தொண்டர்களாலும் லட்சக்கணக்கில் சேர்ந்த புதிய உறுப்பினர்களாலும் இது சாத்தியம் என்பது சத்தியம்'' என குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்