சென்னை: தென் சென்னை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தென் சென்னை தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதியை, அக்கா 1825 என்ற பெயரில் தொகுதி மக்களின் மூலமாக வெளியிட்டார். மேலும், தனி மொபைல் ஆப் மற்றும் வாட்சப் எண் 9550999991 மூலம் பொதுமக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
இதன் தொடர்ச்சியாகத் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "6 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்ட நேரத்தில் மக்கள் கூறிய கருத்துகளை ஒருங்கிணைத்து ஒரு தேர்தல் அறிக்கையை உருவாக்கி உள்ளோம்.
அக்கா 1825 என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 365 நாட்கள் 5 ஆண்டுகள் என்ற அடிப்படையில் 1825 என்ற எண்ணை வழங்கி உள்ளேன். தென் சென்னை என்றால் வளர்ச்சி அடைந்த சென்னை என பார்க்கிறோம். ஆனால், மழை மற்றும் வெள்ளத்தால் குப்பை நிரம்பிய தென் சென்னையில், அடிப்படை வசதிகள் இல்லை, வாகன நெரிசல், வளர்ச்சி திட்டங்கள் இல்லாத ஒரு தொகுதியாக உள்ளது இதனை எப்படி மாற்ற முடியும்.
பெண்கள் அரசியலுக்கு வரவழைக்கத் திட்டம், குப்பைகளை அகற்றுவதற்கான திட்டம், தென் சென்னை பகுதியில் போக்குவரத்து நெரிசல் மட்டுமே உள்ளது. வளர்ச்சித் திட்டங்களே இல்லாத தொகுதி தென் சென்னைதான். மத்திய அரசுத் திட்டங்களைக் கொண்டு வந்து இந்த தொகுதியை வளர்ச்சி அடைந்த பகுதியாக மாற்றுவேன்.
மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கு தற்போது வரை நிதி ஒதுக்காமல் இருப்பதற்குக் காரணம் தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் முறையாகச் செயல்படாமல் இருப்பதே காரணம். வந்தே பாரத் இரயிலைக் கொடுத்த மத்திய அரசால் மெட்ரோ இரயில் கொடுக்க முடியாதா? வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டில் ஒரு இ - பஸ் கூட இல்லை.
திராவிட மாடல் என்ற பெயரில் உணர்ச்சிகரமாகப் பேசுகிறோமே ஒழிய, வளர்ச்சி கரமான திட்டங்கள் எதுவும் இல்லை. ஆளுநராக இருந்த போதும் தமிழ்நாட்டைப் பற்றியே சிந்தித்தேன். கோதாவரி தண்ணீர் சென்னைக்குத் தரப்பட்டால் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என கூறப்படுகிறது.
ஆளுநராக இருந்த நேரத்தில் அப்போது இருந்த தமிழக அரசு மற்றும் தெலுங்கானா அரசு சந்தித்து பேச்சு வார்த்தையை நடத்தினோம். அரசியல் காரணமாக அது நடைபெறவில்லை. ஆனால், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டால் அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும் என நம்பிக்கை உள்ளது.
அரசியல் ரீதியாக இருந்த சிக்கல்களாலே கோதாவரி இணைப்பை மேற்கொள்ள முடியவில்லை. ஆளுநராக இருந்த போது இருந்த நட்பைப் பயன்படுத்தி கடலில் கலக்கும் கோதாவரி நீரைச் சென்னைக்குக் கொண்டு வந்து சேர்ப்பேன்.
மத்திய அரசின் திட்டங்களையே மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இல்லம் தேடி கல்வி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பிரதமர் காப்பீட்டுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற மத்திய அரசின் திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி வருவதால், முதலமைச்சருக்கு ஸ்டிக்கர் ஸ்டாலின் என்று பட்டம் சூட்டினால் கூட தவறு இல்லை.
நான் எம்.பி ஆனதும் முதல் வேலையாகத் தென் சென்னையில் மண்டல வாரியாக வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வேன். அதற்காகத் தனி புத்தகமே வெளியிட உள்ளேன். ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காத சென்னையாக மாற்றுவேன்.
ஸ்டாலின் எதார்த்தத்தை நினைப்பதை விட திரைப்படங்களைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக வழிகாட்டியது திமுக தான் என கூறுகின்றனர். ஆனால், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தமிழ் மொழி வளர்ச்சி குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம்.
தமிழர்களைப் பற்றிப் பேச திமுக காங்கிரசுக்குத் தகுதி இல்லை. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, திமுக காங்கிரஸ் ஆட்சிதான் இருந்தது. கச்சத்தீவு மீட்கப்படும். காங்கிரஸ் திமுக கூட்டணியின் போது கச்சத்தீவு கொடுக்கப்பட்டது.
ஆனால், அதன் பின்னர் காங்கிரஸ் ஆட்சியில் மீட்கவில்லை. பாஜக ஆட்சியில் மீட்க நடவடிக்கை எடுப்போம். கச்சத்தீவை மீட்க இந்த ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என சொல்கிறார்கள். நீங்கள் ஏன் இலங்கைக்குக் கொடுத்தீர்கள்? அதற்குப் பதில் சொல்லுங்கள்.
இதையும் படிங்க: தாம்பரத்தில் சிக்கிய ரூ.4 கோடி யாருடையது?... கோவர்தன் மகன் வாக்குமூலத்தால் திருப்பம்!