சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முதற்கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்தது. இந்த நிலையில், தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் 13-வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனவும், திமுகவினர் கள்ள ஓட்டு செலுத்திவிட்டனர் எனவும், தென் சென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் அமித்-ஐ நேரில் சந்தித்த பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் புகார் மனுவை அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், "தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும். திமுக தோல்வி பயம் வந்தால் மாற்றுப்பாதையை கடைபிடிப்பர். அந்த வகையில், மயிலாப்பூர் தொகுதியில் 13-வது வாக்குச் சாவடியில், 122-வது வட்டத்தில் நேற்று கள்ள ஓட்டுப் போட திமுகவினர் முயற்சித்தனர். ஆகையால், அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு (Re-Election) நடத்த வேண்டும். அந்த சம்பவத்தின் போது, திமுகவினர் 50 பேர் வாக்குச்சாவடிக்குள்ளே புகுந்து எங்களது ஏஜெண்ட்களை அடித்து வெளியில் அனுப்பி விட்டனர்.
பல இடங்களில் தேர்தல் ஆணையம் குடும்பத்தையே பிரித்து விட்டது. கணவன் - மனைவி பெயர் வேறு வேறு வாக்குச்சாவடிகளில் இடம் பெற்றுள்ளது. பலரது பெயர்கள் கொத்துக் கொத்தாக நீக்கப்பட்டு விட்டது. திமுக இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபடக் கூடாது. வெள்ளி, திங்கள் ஆகிய கிழமைகளில் தேர்தல் நடத்தக் கூடாது. அப்படி நடந்தால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து விடுமுறையாக நினைத்து விடுகின்றனர்.
தேர்தலை வாரத்தின் நடுவில் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை போல வைக்க வேண்டும். தேர்தல் விழிப்புணர்வு விளம்பரத்துக்கு கோடிக்கணக்கில் செலவு செய்வதை விட, வாக்காளர்கள் அனைவரது பெயரும் பட்டியலில் இருக்கிறதா என்பதை ஆணையம் கண்காணிக்க வேண்டும். 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற விளம்பரங்களால் எந்தப் பயனும் இல்லை.
உயிரோடு இருக்கும்போது அவர்களது பெயரை எப்படி நீக்குகிறார்கள்? டெண்டர் வாக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்கு போன்ற நடைமுறைகள் குறித்து வாக்காளர்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. நேற்று குறிப்பிட்ட வாக்குச்சாவடியில், நாங்கள் வாக்காளர்கள் யாரையும் சாதி சார்ந்து பேசவில்லை. திமுக அதுபோல குற்றச்சாட்டை வைப்பது தவறு.
மேலும், வாக்கு சதவீதம் குறைந்தாலும் எங்கள் வாக்குகள் அனைத்தும் எங்களுக்கு பதிவாகி இருக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன். வாக்கு சதவீதம் குறைந்தது கவலை அளிக்கக் கூடியதுதான். வாக்காளர்கள் தங்களுக்கு வாக்குரிமை இருக்கிறதா என்பதை தாங்களே சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறை உரிய பலன் தரவில்லை. எனவே அலுவலகம், ரயில் நிலையம், இணையதளம் மூலம் மாதிரி வாக்காளர் பட்டியல்களை மக்கள் சரிபார்த்துக் கொள்ளும் வகையில் அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
மேலும், பெயர் நீக்கப்பட்டதில் பாஜக வாக்காளர்கள் என்று தெரிந்துதான் பலரை நீக்கியுள்ளனர். சாவடி ஏஜெண்ட்கள் போதுமான அளவு இல்லாததால்தான், பாஜக வாக்குகள் நீக்கப்பட்டு விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. ஏனெனில், பூத் ஏஜெண்ட்களுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை" எனத் தெரிவித்தார்.