சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக துணைth தலைவர் கரு.நாகராஜன் ஆகியோர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது, “அனைத்து மக்களும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் தீபாவளியைக் கொண்டாட வேண்டும். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். ஆன்மீகமும், தேசியமும் எனது இரண்டு கண்கள் என கொண்டு செயல்பட்டவர் முத்துராமலிங்கத் தேவர்.
ஆன்மீகமும், அரசியலும் கலக்க முடியாது என்ற கொள்கையை திமுகவினர் வைத்துள்ளனர். ஆன்மீகத்தையும், அரசியலையும் சரியான பாதையில் கொண்டு சென்றதால் தான் தேவர் திருமகனாருக்கு வெற்றி கிடைத்தது.
இதையும் படிங்க: விளையாட்டுத் திடல்கள் தனியாருக்கு டெண்டர் விட்டால் என்னவாகும்? மாமன்ற உறுப்பினர்கள் கூறுவது என்ன?
எனவே, மதுரையில் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்திய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும். மெட்ரோ ரயிலை ஆரம்பித்த பிறகு மத்திய அரசு தலையிட்ட பின்னர் தான் நிறைவடைய முடிகிறது. பாஜக பலம் பெற்றால் மட்டுமே இங்குள்ள மக்களுக்கான திட்டங்கள் சரியாக நிறைவேற்ற முடியும்.
உதயநிதி, நடிகர் அஜித்துக்கு வாழ்த்து கூறுகிறார். விஜய்க்கு கோபம் வருவதற்காக அஜித்துக்கு வாழ்த்து கூறுகிறாரா என தெரியவில்லை. உலக அரங்கில் விளையாட்டை முன்னிறுத்த அஜித்துக்கு வாழ்த்து கூறிவிட்டு, சாமானிய மக்கள் விளையாடும் மாநகராட்சி விளையாட்டுத் திடல்களுக்கு, 10 பேர் பயிற்சி பெற்றால் ஒரு மணி நேரத்திற்கு 1,200 ரூபாய் கட்ட வேண்டும் என்ற மிகக் கொடுமையான தீர்மானத்தை மாநகராட்சி நிறைவேற்றி இருக்கிறது (தற்போது அத்தீர்மானம் வாபஸ் பெறப்பட்டது). சாமானிய மக்கள் பயன்படுத்தும் விளையாட்டுத் திடலுக்கு கட்டணம் விடுத்திருப்பதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.
போதைப்பொருள் தடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், மாதவரத்தில் 27 கோடி ரூபாய் போதைப் பொருட்கள் பிடிபட்டிருக்கிறது. போதைப் பொருளிலிருந்து குழந்தைகளை வெளியில் கொண்டு வர விளையாட்டு தேவை. விளையாட்டை பிரதமர் ஊக்கப்படுத்தி வரக்கூடிய நிலையில், விளையாட்டை நசுக்கும் அளவிற்கு மாநகராட்சி பூங்காக்களில் விளையாடுபவர்களுக்கு கட்டணம் வசூலிப்பது உடனே திரும்பப் பெற வேண்டும்.
அம்மா அரங்கம், சர் பிட்டி தியாகராய அரங்கம் நஷ்டத்தில் ஓடுகிறது என அவைகளை தனியாருக்கு விடுவதை உடனே திரும்பப் பெற்று, ஏழை மக்கள் திருமண விழாக்கள் நிகழ்ச்சிகளை நடத்தி பயன்பெறும் வகையில் அங்கு வசதிகளை மேம்படுத்த வேண்டும்'' எனக் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்