"பிடித்திருந்தால் சேருங்கள்".. தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான இணைய முகவரி அறிமுகம்! - தமிழக வெற்றிக் கழகம்
TVK APP: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான இணைய முகவரியை தலைவர் விஜய் அறிமுகப்படுத்தியுள்ளார்
Published : Mar 8, 2024, 5:43 PM IST
|Updated : Mar 8, 2024, 10:59 PM IST
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான இணைய முகவரியைக் கட்சித் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தியுள்ளார். இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில், “இது தமிழக வெற்றிக் கழகத்தில் என்னுடைய உறுப்பினர் அட்டை, நான் எடுத்து விட்டேன்.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற அடிப்படை சமத்துவக் கொள்கையை கடைப்பிடித்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், எங்களுடைய பயணத்தில் இணைந்து, மக்கள் பணி செய்ய நாங்கள் ஏற்கனவே வெளியிட்ட தவெக கட்சியின் உறுதிமொழியைப் பொதுமக்கள் படிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு விருப்பமிருந்தால் கட்சியில் உறுப்பினராக இணையுங்கள்” எனக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களின் வெற்றிக்கான நமது பயணத்தில், தோழர்களாக இணைந்து மக்கள் பணி செய்ய விரும்பினால் நமது கட்சியின் உறுதிமொழியைப் படித்துவிட்டு, கீழே உள்ள உறுப்பினர் சேர்க்கை QR-Code இணைப்புகளைப் பயன்படுத்தி, மிகவும் எளிய முறையில் உறுப்பினர் அட்டையை உடனடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இதுகுறித்து தவெக கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகளிர் அனைவருக்கும் எனது அன்பான மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை நான் பெற்றுக் கொண்டது குறித்துப் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்கிற அடிப்படைச் சமத்துவக் கொள்கையைப் பின்பற்றி, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து, மக்கள் பணி செய்ய விரும்பினால், நமது கட்சியின் உறுதிமொழியைப் படித்துவிட்டு, கீழே உள்ள உறுப்பினர் சேர்க்கை QR-Code இணைப்புகளைப் பயன்படுத்தி, மிகவும் சுலபமான முறையில் உறுப்பினர் அட்டையை உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம். வாருங்கள்! தோழர்களாக இணைந்து, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் சரித்திரம் படைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனையொட்டி, இன்று சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில், கட்சித் தொண்டர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயற்கை நுண்ணறிவு செயலியை (Artificial Intelligence App) காணொலி மூலம் துவக்கி வைத்தார்.
செயலியின் Demo Video காண்பித்து, உறுப்பினர் சேர்க்கை குறித்து கட்சித் தொண்டர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் N.ஆனந்த் முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக, தவெக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை அணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர் சேர்க்கை அணியின் மாநிலச் செயலாளராக விஜயலட்சுமி என்பவரும், மாநில இணைச் செயலாளராக யாஸ்மின் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் மாநிலப் பொருளாளராக சம்பத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: நலன் குமாரசாமி - கார்த்தி கூட்டணியில் உருவாகும் ‘கார்த்தி 26’ பூஜை வீடியோ வெளியீடு!