சென்னை: 2024 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த பிப்.12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இந்நிலையில், 2024 - 2025ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் தாக்கல் செய்யும் பட்ஜெட் என்பதால் பல முக்கிய நலத்திட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, ’தமிழ் புதல்வன்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதே போல் கடந்தாண்டு உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ’மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம்’ பெண்களின் உயர்கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு ’தமிழ் புதல்வன்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இது குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் “தமிழ்ப் புதல்வன் எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும்.
தமிழ் புதல்வன் திட்டம்: 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
இத்தகைய முன்னோடித் திட்டங்களின் மூலம் நமது இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி அவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள். இப்புதிய திட்டத்தின் மூலம் சுமார் 3 லட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவர்.
உயரிய நோக்கம் கொண்ட இத்திட்டத்தை நிறைவேற்றிட வரும் நிதியாண்டில் 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும், அவர்களைக் கல்வியில் மட்டும் அல்ல திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு அறிமுகப்படுத்திய புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் வரிசையில் ’தமிழ் புதல்வன்’ திட்டமும் இணைந்துள்ளதுள்ளது வரவேற்கத்தக்கது.
இதையும் படிங்க: தமிழில் செயற்கை நுண்ணறிவு - ஆராய்ச்சி நிறுவனங்களுக்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு