சென்னை: சென்னை பட்டினம்பாக்கம் நொச்சிக்குப்பம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அரசால் வீடு ஒதுக்கப்பட்டவர்களுக்க்கு இன்னும் வீடு வழங்கப்படாமல் உள்ள நிலையில், ஒரு சில மாதங்களில் அந்த வீடுகள் ஒதுக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக கூறி அப்துல்லா என்ற நபர் அறிமுகமாகியுள்ளார். இதன்படி, ஒரு வீட்டிற்கு 6 லட்சம் ரூபாய் என்றும், முதற்கட்டமாக 3 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனக் கூறி, சுமார் 100க்கும் மேற்பட்ட மக்களிடம் ரூ.3 கோடி வரை ஏமாற்றி பணம் பெற்றுள்ளதாக தெரிகிறது.
மேலும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமிருந்து வீடு ஒதுக்கப்பட்டதற்கான போலிச் சான்றிதழ்கள் மற்றும் டோக்கன்களை வழங்கி பொதுமக்களிடம் கொடுத்து ஏமாற்றியுள்ளார். இந்நிலையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் சான்றிதழ் போலியானது என கண்டறிந்த பொதுமக்கள், அப்துல்லாவை தேடுகையில் அவர் தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்கள் மயிலாப்பூர் காவல் நிலையம் மற்றும் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திலிருந்து வீடு பெற்றுத் தருவதாக ஏமாற்றிய அப்துல்லாவை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து, இதனை அறிந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மயிலாப்பூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பணத்தைப் பெற்றுத் தரக் கோரி கோரிக்கை விடுத்தனர். இதனால் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் பரப்பரப்பு ஏற்பட்டது. மேலும், காவல்துறையினர் விசாரணைக்குப் பிறகே பொதுமக்களை எப்படி ஏமாற்றினார்? இதன் பின்னணியில் யார் உள்ளார்கள்? பணத்தை எங்கு வைத்துள்ளார் என்பது தெரிய வரும்.
இதையும் படிங்க: ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம்.. திருப்பூர் கும்பல் கோயம்பேட்டில் சிக்கியது எப்படி?