சென்னை : பி.எட் படிக்கும் மாணவர்கள் 2ம் ஆண்டில் 80 நாட்கள் ஆசிரியர் பயிற்சிக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் போது அவர்களுக்கான பள்ளிகள் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதல் உடன் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்படுகிறது.
மேலும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் கற்பிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் 6 முதல் 8ம் வகுப்பு வரையில் உள்ள நடுநிலைப் பள்ளிகளிலும் பி.எட் மாணவர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுகின்றனர்.
ஆனால் சிலர் பள்ளிகளுக்கு சரியாக சென்று பாடம் நடத்தாமல் சான்றிதழ்களை பெற்று சமர்பித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் பி.எட் படிக்கும் மாணவர்களின் கற்பித்தல் திறனை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் அதிரடி முடிவுகளை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழக அரசுக்கு கெடு விதித்த சென்னை பல்கலை. ஆசிரியர்கள், அலுவலர்கள்.. பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம் என எச்சரிக்கை!
இதுகுறித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அனைத்து கல்வியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில், "தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்வியியல் கல்லூரியில் 2024-25ம் கல்வியாண்டில் 3ம் பருவத்தில் படிக்கும் மாணவர்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த செப் 12ம் தேதி முதல் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளியில் கற்றல், கற்பித்தல் பணியில் ஈடுபட்டதற்கான சான்றிதழ்களை பெற்று சமர்பிக்க வேண்டும்.
பி.எட் மாணவர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபடுவதைக் கண்காணிக்கவும், பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. கற்றல், கற்பித்தல் பயிற்சி முடித்தவுடன் பள்ளிக்கல்வித்துறையால் மாணவர்களின் வருகைப் பதிவு குறித்த அறிக்கை பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும்.
அந்த அறிக்கை கல்லூரிகளில் அளிக்கும் மாணவர்கள் பயிற்சி வகுப்பு வருகையுடன் ஒப்பீடு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கான வருகைப் பதிவேட்டை தவறாக வழங்கும் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.