சென்னை: சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு தலைவர் சா.காந்தி, “மின்சார வாரியம் 2021-22 மற்றும் 2022-23 என இரண்டு நிதியாண்டு கணக்குகளைச் சமர்ப்பித்துள்ளது.
அதில் கடந்த 2021-22ஆம் ஆண்டில் மின்வாரிய நஷ்டமாக ரூ.18,000 கோடி ஏற்பட்டதால், கடந்த 10.09.2022ஆம் தேதியன்று 5.69 சதவீதம் கட்டண உயர்வை மின்சார வாரிய ஆணையம் விதித்தது. இதனைத் தொட்ர்ந்து, கடந்த 2022-23ஆம் ஆண்டில் ஏழு மாத காலத்தில் கட்டண உயர்வால் கூடுதல் வருவாயாக 14,550 கோடி ரூபாய் வந்தது.
இதை வைத்து பார்த்தால் 2022-23ஆம் ஆண்டில் மக்கள் அளித்த கூடுதல் கட்டணத்தால் நஷ்டம் 4,000 கோடி அளவுக்கு குறைந்திருக்க வேண்டும். ஆனால், 2022-23 ஆம் ஆண்டிலும் 28,000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது . எனவே, இதன் மூலம் மின்கட்டண உயர்வுக்கும், நட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், தற்போது மின்கட்டணத்தை உயர்த்தாததுதான் நஷ்டத்திற்கு காரணம் எனக் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. அதனால் மின்கட்டண உயர்வு குறித்தும், ஆணையம் நட்டத்திற்கான உண்மையான காரணம் குறித்தும் மக்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும், ஆனால் ஆணையம் மவுனம் சாதிக்கிறது.
மேலும், 'உதாய்' திட்டத்தின் படி, மின்வாரியத்திற்கு ஏற்படும் ஒவ்வொரு ஆண்டின் மொத்த நட்டத்தையும் மாநில அரசு ஏற்க வேண்டும். இதற்காகத்தான் இந்தாண்டு பட்ஜெட்டில் மின்வாரிய நட்டத்திற்காக 17,117 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. இதை ஒப்பிட்டுப் பார்த்தால், 2017 -18 ஆம் ஆண்டிலிருந்து அடுத்த ஐந்தாண்டுகளில், மின்வாரிய நட்டத்திற்கு அரசு ஒதுக்கிய மொத்த தொகையே 27,789 கோடி தான்.
ஆனால், இப்போது இந்த ஓர் ஆண்டில் மட்டும் ஒதுக்கும் தொகையோ ரூ.17,117 கோடி.இதுவே அடுத்த ஆண்டில் ரூ.28,000 கோடி அளவுக்கு உயரும். அப்போது வரும் ஆண்டுகளில் மின்வாரிய நஷ்டம், மாநிலத்தின் மொத்த சமூக நலத்திட்டங்களை விழுங்கிவிடும் என்றால் ஆச்சரியம் இல்லை.
இந்த நிலையில், நடப்பாண்டு பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கீடு ரூ.20,198 கோடியும், உயர் கல்வித்துறைக்கு ரூ.8,212 கோடியும் அரசு ஒதுக்கியுள்ளதை சேர்த்தால் மின் வாரிய நட்டத்திற்கு சமம் ஆகும். தற்போது மதுவினால் அரசுக்கு வரும் ஆண்டு வருவாய் 41,000 கோடி. இதைக் கொண்டு மின்வாரிய நட்டத்தை ஒழித்தால் 65 சதவீதம் மது விற்பனையைக் குறைத்திடலாம். இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், இந்த மின்வாரிய நஷ்டமானது எளிய மக்களை படுகுழியில் தள்ளப் போகிறது.
இந்தச் சூழலில் மின்வாரியம் தனக்கு இருக்கும் வேறு ஒரு வணிகத்தையும் கருத வேண்டும். அதாவது, மின்வாரியத்தின் மிகப்பெரிய வணிகம் மின்கட்டமைப்பை தனியார் மின் உற்பத்தியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பது தான், சட்டம் இதை அனுமதிக்கிறது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியாரின் மின்சாரமும் ஒரே கட்டமைப்பில் நாள்தோறும் பாய்கிறது.
தனியார்களின் மின்சாரத்தினை கணக்கிடுவதிலும், இவர்களின் கட்டணத்தை வசூலிக்காமல் இருப்பதிலும், இவர்கள் மின்சாரத்தை பயன்பாட்டில் நேர் செய்வதிலும், சட்டத்தை மீறி இவர்களுக்கு ஆணையம் அளிக்கும் சலுகைகளினால் தான் நஷ்டம் வருகிறது. இந்த நஷ்டம் ஆண்டுதோறும் மின்வாரியக் கட்டமைப்பை பயன்படுத்தும் தனியார்களுக்கு கொள்ளை லாபமாக போய்ச் சேருகிறது.
எனவே, இந்த நஷ்டமே மின்கட்டண உயர்வாகவும், மேலும் இதனால் நலத்திட்டங்களின் பங்கு நிதிகளை முழுங்குகிறது. அதுவும் மக்கள் தலையில் விழுகிறது. இவை அனைத்தும் தனியார் மின் உற்பத்தியாளர்கள், மின்வாரியம், மின்சார ஒழுங்கு முறை ஆணையம் இவர்களின் ஊழலால் வந்த நட்டம். மின்கட்டமைப் பயன்படுத்தும் தனியாரால் மட்டும் வந்தவை. இதனை முன்னுரிமை தந்து உடனடியாக விசாரிக்க வேண்டும். மேலும், இந்த ஊழல் தொடர்பானவர்களை கைது உட்பட உரிய நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? “மின்சார தீவிரவாதம்”.. அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு!